பக்கம் எண் :

3010.

     சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
          தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
     புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
          பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
     இனந்திருத்தி எனையாட்கொண் டென்னுள்அமந் தெனைத்தான்
          எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
     கனந்தருசிற் சுகஅமுதம் களிந்தளித்த நிறைவே
          கருணை நடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.

உரை:

     ஏழை யெளியவர்க் கிரங்கும் அருட் பெருஞ் செல்வமே, மெய்ம்மை சான்ற ஞானசபைத் தலைவனே, பெருமை தரும் ஞான வின்பவமுதத்தை மகிழ்ந்தளிக்கும் பூரணனே, அருள் நடம் புரியும் அரசே, என் கண்ணில் விளங்கும் மணி போல்பவனே, பொய் யொழுக்கமுடைய உலகத்தவர், உள்ளத்தி லொன்றும் புறத்தி லொன்றுமாகப் புனைந்துரைப்பர்; அவர்களைப் போல் நான் உன் திருமுன்பு புனைந்துரைக்கின்றேனில்லை; என் இனத்தவரையும் என்னையும் திருத்தி ஆட்கொண்டு என்னுடைய உள்ளத்திலும் எழுந்தருளி எவ்வுலகத்தவரும் கண்டு தொழுமாறு மேனிலைக்கண் உயர்த்திய சற்குருவே; ஓரொருகால் அருள் விளக்கமின்றிச் சினம் கொண்டு பேசிய பிழைகளை யுடையவனாதலால் அவற்றைப் பொறுத்து அருள்புரிய வேண்டுகிறேன். எ.று.

     தீனர் - ஏழை யெளியவர்; வறியவருமாம், அறிவாலும் பொருளாலும், வறுமை யுற்ற தீனருக்கு, அன்புடன் வேண்டுவன உதவுவதால் “தீன தயாநிதியே” என்றும், மெய் யுணர்வின் நன்னிலையமாகிய திருச்சிற்றம்பலத்தில் ஞான நடனம் புரியும் தலைவனாதல் விளங்க, “மெய்ஞ்ஞான சபாபதியே” என்றும் நங்கை எடுத்துரைக்கின்றாள். தயாநிதி - தயவாகிய செல்வம். ஞான சபாபதித் தலைவன். ஞானத்தால் உளதாகும் சுகத்திற் பெரியது வேறின்மையால், “கனந் தரும் சிற்சுகம்” என்றும், அஃது அமுதும் போல் அனுபவிக்கப் படுதல் தோன்றச் “சுகவமுதம் என்றும், அதனைப் பிறர்க்கு வழக்குவதாற் குறைவு படாமை பற்றி, “அமுதம் களித் தளித்த நிறைவே” என்றும், ஞான சபையில் நிகழ்த்தும் திருக்கூத்தும் உலகுயிர்கள்பால் கொண்ட பேரருளால் நடப்பதென்றற்குக் “கருணை நடத்தரசே” என்றும், கண்ணிற் கருமணி போல் காண்பன காணச் செய்தலின், “என் கண்ணிலங்கு மணியே” என்றும் இயம்புகின்றாள். ஒருவரது ஒழுக்கம் கண்டு திருத்திய வழி, அவர் அதன் கண்நின்று நலம் பெறுதற்கு நல்லினம் காப்பாதலின், அதனையும் திருத்தியமைப்பது இன்றியமையாதலால் “இனம் திருத்தி எனை யாட்கொண்டு” எனவும், தானும் உடனிருந்து பேணுவது புலப்பட, “என்னுள் அமர்ந்து” எனவும், இவ்வண்ணம் செம்மை நிலை பெற்ற யான் சிவமாய் எவரும் கண்டு தொழும் உயர் வாழ்வு பெறுதற்குரிய சிவ ஞானத்தை நல்கிச் சிவாசாரியனாயினாய் என்பளாய் “எனைத்தான் எவ்வுலகும் தொழ நிலைமேல் ஏற்றிய சற்குருவே” என்றும், இனிதுரைக்கின்றாள். “இருளாய வுள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கொடுத் தேழையேனை யுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன் போற் சிவயோக நெறியறியச் சிந்தை தந்த அருளான்” (புள்ளிருக்கு) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. “நல்லினத்தி னூங்கும் துணையில்லை” (குறள்) என அறநூல் உரைப்பதால், “சினம் திருத்தி “ என முற்பட மொழிகின்றாள். மக்கள், தேவர் அனைவரும் புகழ்வது கொண்டு “எவ்வுலகும் தொழ” என்கிறாள். மேல் நிலை என மாறுக. நிலையா வியல்பும் பொய்யாய் மறையும் தன்மையும் உடையதாகலின், உலகு தன்கண் வாழ்வார்கண் பொய்ம்மை பொருந்துவித்தல் விளங்கப் “பொய் யுலகர்” எனவும், பொய்ந் நினைவும் பொய் யுரையும், பொய்ச் செய்கையும் அவர்கள்பால் அமைதலால், உள்ளத்தி லொன்றும் புறத்தி லொன்றும் கொண்டு, உரைக்கு மிடத்து இல்லது புனைந்து பேசுதல் அவர் கட்கு மரபாகிறது என்பாளாய், “அகத் தொன்றும் புறத் தொன்றும் நினைத்தே பொய்யுலகர் புனைந்துரைப்பார்” என்றும், அவர்கள் வாழும் உலகில் அவரிடையே வாழ்வேனாயினும், யான் அது செய்கிலேன் என்பாள், “ஆங்கவர்போல் புனைந்துரைத்தேனலள் நான்” என்றும் புகல்கின்றாள். இனம் தூயதாதற் பொருட்டுச் சற்குருவாய் மேனிலையேற்றியதும் சிற்சுக அமுதம் அளித்தமையும் காரணம் என்று, குறிப்பாய் உரைக்கின்றாள். இங்ஙனம் தூய்மை செய்து இனம் திருத்திச் சிற்சுகானுபவம் பெற்றேனாயினும் முற்றக் கடியும் குற்ற மின்மையின், பிறரைச் சினந்துரைத்துப் பிழை பல செய்துளேனாதலால் அதனை நீதான் பொறுத்தல் வேண்டும் என்பாளாய், “சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம் பொறுத்தல் வேண்டும்” என மொழிகின்றாள்.

     இதனாற் சினம் காரணமாகச் செய்த பிழைகளைப் பொறுத்தருள்க என முறையிட்டவாறாம்.

     (4)