பக்கம் எண் :

3012.

     என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
          என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
     பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
          பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
     அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
          அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
     மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
          மாநிதியே என்க்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.

உரை:

     என்னைப் பெற்ற தாயினும் அருளுடையவனே, எனக்குத் தந்தையானவனே, அது வல்லாமலும் எனது அரிய வுயிர்க்கு உயிராய் என்னுள் நிறைந்த பெருமானே, மணிமன்றின்கண் திருக்கூத்தாடும் அரசே, திருவருட் பெருஞ் செல்வமே, என் சிந்தைக்கண் நீ கலந்து கொண்டோய்; அது போல் நானும் உனது திருவுள்ளத்தில் கலந்து கொண்டேன்; ஆகவே என் செயலனைத்தும் உன்னுடைய செயலாம்; இவ்வியைபினால் உனது பெருஞ் செயல் யாவும் என் செயல்களாம்; நினக்குப் பின்னிருக்கின்ற யான் பேசுவனவெல்லாம் வேறாகக் கொண்டு என் மேற் குற்ற மேற்றி விலக்கக் கருதுவாயாகில் யான் பெருவழக்கிடுவேன்; அதனால் என் மனக்கலக்கம் தீர எளியேனுக்கு அருள்செய்தல் வேண்டும். எ.று.

     தாயிற் சிறந்த தயவுடைய னென்பது பற்றி, “அன்னையினும் தயவுடையாய்” எனவும், உணர்வு தருதலால் “அப்பன் எனக்கு ஆனாய்” எனவும் இயம்புகிறாள். இது பற்றியே சான்றோர், “அப்பனீ அம்மை நீ” (தனித்) எனத் திருநாவுக்கரசர் உரைக்கின்றார். வேறாகாமல் கலந்திருப்பது விளங்க, “என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்” என வுரைக்கின்றார். திருவம்பலத் திருக்கூத்து எக்காலத்தும் இடையறவின்றி நிகழ்வதனால், “மன்று மணிப் பொதுநடம் செய் மன்னவனே” என வழுத்துகின்றார். அவன் திருமேனி அருளுருவாதலின், “கருணை மாநிதியே” என விளம்புகின்றார். என் உயிர்க் குயிராதலன்றி, என் மனத்திற் கலந்திருக்கின்றது போல நானும் உன் திருவுள்ளத்திற் கலந்துள்ளேனாதலால், “என் செயல் உன் செயல், உன்றன் இருஞ் செயல் என் செயலே” எனத் தனக்கும் சிவனுக்கு முள்ள ஒற்றுமை நலத்தை எடுத்துரைக்கின்றார். திருவருள் வழி நிற்றலின் தன்னைப் “பின்னுள நான்” என்றும், ஓரொருகால் தான் மனத்தின் வழி நின்று பேசுவன பலவும் பொருளாகிய திருவருளை நினையாது பேசுவனவாதலின் அவற்றைப் “பிதற்றல்” என்றும், அது கருதித் தன்னை விலக்குதல் கூடா தென்றற்கு “வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ” என்றும், வழக்கிட்டாராயலுறின், என் பிழைகளிலும் நினக்குக் கலப்புண்டிருத்தல் வெளியாம் என்பாராய், “பெருவழக் கிட்டிடுவேன்” என்றும் பேசுகின்றார். நன்று நினைந்து செய்தற்கண், உளக்கிருக்கும் கலப்புப் பிழை செய்யுமிடத்தும் உளதாகுமோ என ஐயுற்று வருந்தும் என் மனக்கலக்கத்தைப் போக்கி, யருள்க என வேண்டலுற்று, “எனக் கருள்வாய் மனக்கலக்கம் தவிர்த்தே” என வுரைக்கின்றார். “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்பது திருவாசகம்.

     இதனால், என்னுடைய நினைவு செயல்களில் பிழை கண்டு விலக்குவையோ எனவுண்டாகும் மனக்கலக்கத்தைப் போக்கி யருள்க என வேண்டியவாறாம்.

     (6)