பக்கம் எண் :

3016.

     குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் லேறோர்
          குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
     சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
          சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
     பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
          பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
     இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
          னுன்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.

உரை:

     என்னுடைய தலைவரே, குற்றமாவனவற்றை ஒரு சிறிதும் கருதுவதில்லேன்; வேறொரு காரணத்தாலுற்ற குறை காரணமாகச் சில சொற்களைச் சொன்னேன்; அதனை மீளவும் நினைக்கவில்லை; அதனால் மனம் சிறிதளவும் வேறுபடவில்லை; எனக்குச் சாமியாகிய நும் மேல் ஆணையாக வுரைக்கின்றேன்; ஒரு சூழ்ச்சியும் நினைத்தேனில்லை; என்னைப் பெற்ற தாயும் தந்தையும் உற்றாரும் சுற்றத்தாரும் எல்லாம் நீரேயென்று மனத்திற் கொண்டுள்ளேன்; வேறொரு கடுஞ்சொல்லும் பேசியறியேன்; இன்று முதல் என்னைப் பொறுத்தவரை வேறாக நினத்தல் வேண்டா; என்னுடைய ஆசையும் இதுவேயாகும். எ.று.

     நாயகர் - தலைவர். குற்றமான எண்ணங்களை நினைவிற் கொண்ட தில்லையென்பாளாய்” குற்றம் ஒருசிறிதெனினும் குறித்தறியே” னெனவும், வேறே செய்வினைக்கண் ஏற்பட்ட குறை காரணமாகக் கடுஞ் சொற்கள் சிலவற்றைப் பேசியதுண்டு என்பாள், “வேறோர் குறையதனால் சில புகன்றேன்” எனவும், அதனையும் உடனே மறந் தொழிந்தேன் என்றற்கு “மீட்டும் குறித்தறியேன்” எனவும் எடுத்துரைக்கின்றாள். குறித்தல், ஈண்டு நினைத்தல் மேற்று. நினைவு சொற்களுக்கு வேறான செயல்வகைக் குறையை “வேறோர் குறை” எனக் கூறுகின்றார். அது தானும் ஒரு பொருளாகக் கருதக் கூடாத தொன்றாதலால் “மீட்டும் குறித்தறியேன்” என மொழிகின்றாள். இச்செயலால் என் மனப் பண்பும் வேறுபட வில்லை என்று வற்புறுத்தற்கு “சற்றும் மனம் வேறுபட்டதில்லை கண்டீர்” என்றும், அது பிறரறியத் தோன்றுவ தன்றாய், உள்ளத்துறையும் இறைவன் ஒருவனே அறியற்பாலதாகலின், “சாமி நும் மேல் ஆணை” என்றும் இயம்புகின்றாள். சாமி, தலைவனைக் குறிக்கு மொழி; வழக்கு மொழி. “மீனேறுயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பின், தான் ஏறனையானுளன் சீவக சாமி என்பான்” (சீவக) எனத் திருத்தக்க தேவர் உரைப்பது காண்க. ஆணை வன்புறைக் குறிப்பு மொழி. சதுர் - சதுரப்பாடு எனவும் வழங்கும்; நுண்ணிய சூழ்ச்சியென்பது பொருள். பெற்றவள் - தாய் தந்தையென்பதுவருவிக்கப்பட்டது. உற்றவர் - பிறப்பால் தொடர்புடையவர். சுற்றம், அன்பாற் சூழ இருப்பவர். பிடித்திருத்தல் - கடைப் பிடித்தல். வெடிப்பு, சினத்தால் கடுஞ் சொற்களை உரத்த குரலில் உரைத்தல். இற்றை - இன்று; இதனை ஐயீற்றுக் குற்றுகரமென்பது முண்டு. வேறு நினைத்தல். நொதுமலாகக் கருதுதல். அன்பால் ஒன்றியவளாகக் கொள்ளல் வேண்டு மென்பாள், “என்னாசை இதுவே” என்று இசைக்கின்றாள்.

     இதனால், இறைவனே தனக்குப் பெற்றோரும் உற்றோரும் சுற்றமுமாகக் கருதி ஒழுகினமை தெரிவித்தவாறாம்.

     (10)