3018. சீத்தமணி அம்பலத்தான் எம்பிராண நாதன்
சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
உரை: தோழி, தூய மணிகள் இழைத்த அழகிய சபையையுடையவனும், என்னுயிர்க்குத் தலைவனும், சிவபெருமானும், எமக்குப் பெருமானுமாகிய செல்வ நடராச மூர்த்தி, பெண்ணியல்பு கொண்ட என்னலத்தை நானே அறிய மாட்டாத இளமைக் காலத்திலே, என்னை விரும்பி என்பாற் போந்து எனக்கு மாலையிட்டுக் கணவனானான்; ஆயினும், பின்பு ஒரு நாளும் என் முகத்தைப் பார்த்திலன்; நுண்ணிய கலை பலவும் கற்றுணர்ந்த தெய்வ மகளிரைப் போன்றபெண்களில் யாருடைய துர்ப்போதனையோ, தெரியேன்; ஆயினும், நான் சொல்லும் இதனைக் கேள்; காய்த்த மரம் தலை வளையாமை யில்லை; அவனது அருணிறைவை அறிந்து கொண்டேனாதலால் இனி அவனை விட மாட்டேன், காண். எ.று.
சீர்த்தல் - தூய்மை செய்தல்; அல்லது நீக்குதல்; சீர்த்த மணியென்பது சீத்த மணியென வந்தது எனினும் பொருந்தும். பிராண நாதன் - உயிருணர்வுக்குத் தலைவன். சிவபெருமானாயினும் எம்பால் துன்னிய தொடர்புடையவ னென்பாள், “சிவ பெருமான் எம்பெருமான்” என்றும், வாழ்தல் வேண்டிப் பொன்னுக்கும் பொருட்கும் ஆசையுற்றுக் கூத்தாடும் உலகியற் கூத்தரைப் போலாது உலகுயிர்களை வாழ்வித்தல் வேண்டித் திருவருட் கூத்தாடுபவன் “என்றற்குச் செல்வ நடராசன்” என்றும் சிறப்பிக்கின்றாள். செல்வம் - திருவருட் செல்வம். “செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன்” (கோயில்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. பெண்மை நலக் கூறுகள் அனைத்தும் நிறைந்துள்ளமை தோன்ற “வாய்த்த” என உரைக்கின்றாள். நலம் யாவும் வாயாத காலத்தே வந்து மாலையிட்ட பெருமான் வாய்த்த இக்காலத்தே வந்திலன் என்பது தோன்ற, “மறித்தும் முகம் பாரான்” எனவும், ஆய்வாற் கலையறிவு நுண்ணியதாதல் பற்றி, நுண்ணறிவுடைய மங்கையரை, “ஆய்த்த கலை கற்றுணர்ந்த அணங்கனையார்” எனவும், எத்துணை அறிவும் நலமும் உடையராயினும், பிற மகளிர் நலம்காணின் அழுக்கறுவர் என்பது புலப்பட, “அணங்கனையார் தமக்குள் ஆர் செய்த போதனையோ” எனவும் இயம்புகிறாள். போதனை, ஈண்டு அழுக்காற்றுரை மேனின்றது. அதனால் மனம் பேதுறாமை விளங்க, “ஆனாலும் இது கேள்” என வுரைக்கலுற்று, அருளால் நிறைவுடைய பெருமானாதலால், இப்போது என்னிடம் வாரா தொழியான் எனத் தன்கோள் உரைப்பாளாய், “காய்த்த மரம் வளையாத கணக்கு முண்டோ” எனப் பிறிது மொழிதலாற் கூறுகிறாள். அரும்பிப் பூத்திருக்கும் காலத்தில் நிமிர்ந்து தலைதூக்கி நிற்கும் மரக்கொம்பு காய்த்த காலத்தில் காய்களின் கனத்தால் தலை வளைந்து தாழ்வது இயல்பாதலால், “காய்த்த மரம் வளையாத கணக்கு முண்டோ” என்றும், காய்த்துத் தலைவணங்கித் தொங்கும் போது வேண்டுவோர் எட்டிப் பற்றிக் கொள்வது போல யானும் அப்பெருமான் திருவருள் நலத்தைப் பெற்று இன்புறுவேன் என்பாளாய், “கணக் கறிந்தும் விடுவேனோ கண்டாய்” என்றும் எடுத்துக் கூறுகின்றாள் இதனை “வேட்கை ஒருதலை யுள்ளுதல்” (தொல். கள) என்பர்.
இதனால், வேட்கை மிகுதியால் தலைவன் திருவருளைப் பெறா தொழியேன் எனத் தன் கோள் கூறியவாறாம். (2)
|