3019. என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
உரை: என் உயிர்க்குயிராய்க் கலந்து இன்பம் செய்கின்ற பெருமானும், எனக்கு இறைவனும், ஞான சபையில் நடிப்பவனுமாகிய நடராச மூர்த்தி, அவனை இத் தன்மையனென்று அறிய மாட்டாத இளம் பருவத்தில் என்னை மணந்து கொண்டவன், அறிவறிந்த எனது இப்பருவத்தில் எனது விருப்பறியாமல் இருக்கின்றான்; மணத்தற்கு முன்போ, அதற்குப் பின்போ, ஒரு குற்றமும் யான் செய்யவில்லை; பெண் படும் அவலம் கண்டு மனமிரங்குதல் ஆடவர் பெருந்தகைமைக்கு அழகாகும்; கரும்பென்றால் அதற்குக் கைப்புச் சுவை அமைவது முறையன்றே; முறையும் நெறியு மறிந்துள்ள நான் இனி அவரை விட மாட்டேன், காண். எ.று.
உயிர்க்குயிராய்க் கலந்து அறிவின்பம் நல்குவது இறைவன் செய்கையாதலால், “என்னுயிரிற் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான்” எனவும், அவனுக்கும் தனக்குமுள்ள தொடர்பு காட்டற்கு “என் இறைவன்” எனவும், அவனது அருட் செயலை விளக்குதற்குப் “பொதுவில் நடம் இயற்றும் நடராசன்” எனவும் இயம்புகின்றாள். நடராசன் என்பதைச் சோழர் காலக் கல்வெட்டுக்கள் “ஆட வல்லான்” எனக் கூறுகின்றன. அவனை இறைவனென்றும், உயிராகிய தன்னை அவற்கு அடிமையென்றும் அறிவது பருவ நிலை; மணப்பருவத்துக்கு முன்னையதாகிய பேதைப் பருவ வியல்பு தெரிவித்தற்குத் “தன்னையறியாப் பருவ” மென்றும், மணத்துக்குப் பின்னதாகிய பெதும்பைப் பருவத்தைத் “தனையறிந்த பருவ” மென்றும் உரைக்கின்றாள். “காப்புப் பூண்டிசின் கடையும் போகலை பேதையல்லை மேதையங் குறுமகள், பெதும்பைப் பருவத்தொதுங்கினை” (அகம். 7) எனச் சான்றோர் கூறுவது அறிக. எனையறிய விரும்பான் என்றது எனது காதற் காமச் செவ்வியைக் கருதுகின்றானில்லை எனக் குறித்தற்கு, காதலின்பத்தை நல்க விழையாமைக்குக் காரணம் யாதாகலாம் என ஆராய்ந் துணர்கின்றமை தோன்ற, “பின்னையன்றி முன்னுமொரு பிழை புரிந்தேனில்லை” என உரைக்கின்றாள். பெண்ணுயிர்க்குற்ற அவலத்தைப் போக்குவது ஆடவர்க்குப் பெருந்தகையா மென்பது சால்புடைய பெரியோர் கண்ட முறை. “பெண்ணுயிர் அவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதல் எண்ணினன்” (சீவக) எனத் திருத்தக்க தேவரும், “பெண்ணென மனத்திடைப் பெருந்தகை நினைத்தான்” (தாடகை) எனக் கம்பரும் உரைப்பது காண்க. பெருந்தகை - பெருந் தகைமை; பெருந்தகையாகிய அவனுக்கு அழகாகாது எனினும் அமையும். கன்னல் - கரும்பு. கன்னல் இனிக்கும் இயல்பினதேயன்றிக் கைப்பது இயல்பன்று. உலகறிந்த உண்மையாதலால், “கன்ன லென்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ என எடுத்து மொழிகின்றாள். கணக்கு - இயல்பு.
இதனால், அவனைக் கூடியல்லது வேட்கை தீரேன் என வற்புறுத்தியவாறாம். (3)
|