பக்கம் எண் :

302.

    வல்லி ஒருபால் வானவர்தம்
        மகளாண் டொருபால் வரமயில்மேல்
    எல்லின் இலங்கு நெட்டிலைவேல்
        ஏந்தி வரும்என் இறையவனே
    சொல்லி யடங்காத் துயர்இயற்றும்
        துகள்சேர் சனனப் பெருவேரைக்
    கல்லி எறிந்து நின்உருவைக்
        கண்கள் ஆரக் கண்டிலனே.

உரை:

     வள்ளி நாயகி ஒரு பக்கமும் தேவர் மகளான தெய்வயானை ஒரு பக்கமும் பொருத்த மயலூர்தி மேல் பகலவனது ஒளி திகழும் நீண்ட இலை பொருந்திய வேற்படையைக் கையிலேந்தி வரும் இறைவனே, வாயாற் சொல்லி முடியாத துன்பத்தைச் செய்யும் குற்றம் பொருந்திய பிறவியின் பெரிய வேரை அகழ்ந்தெடுத்து அழிக்கும் நின்னுடைய திருவுருவைக் கண்ணாரக் காணேனாயினேன், எ. று.

     வள்ளி நாயகியாரும் தெய்வயானையாரும் முருகப் பெருமானுக்குத் தேவியராதலின், இருவரும் இருபாலும் இருக்கக் கையில் வேற்படை விளங்க மயிலிவர்ந்து தோன்றும் இனிய தோற்றத்தைச் சிறப்பித்து, “வள்ளி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வர மயில்மேல் எல்லின் இலங்கு நெட்டிலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே” என்று உரைக்கின்றார். வல்லி, வள்ளிநாயகியாரைக் குறிக்கும் வடசொல். தெய்வயானையார். தேவ மகள் என்றற்கு, “வானவர்தம் மகள்” என்றும் குறிக்கின்றார். இருவரும் பிரியாப் பெருந் தேவியராதலால் இருவரையும் ஒருசேரக் கூறுகின்றார். எல் - பகலொளி. செய்வினைப் பயன்களை முறை செய்து செய்வோரையே நுகர்விக்கும் செயலினன் என்பது தோன்ற “இறையவனே” என்று உரைக்கின்றார். தனக்கும் முருகனுக்கும் உள்ள உரிமை புலப்பட, “என் இறைவன்” என்கின்றார். பிறவியால் உளவாகும் துன்பங்கள் எல்லை யில்லன வாதலால் “சொல்லி அடங்காத் துயர் இயற்றும் சனனம்” என்றும் துயர்க்குக் காரணமாவன குற்றங்களாதலின், “துகள் சேர் சனனம்” என்றும், அதற்கு அடிவேராக இருக்கும் மூலமலம் ஒழிந்தாலன்றிக் கெடுவதில்லை என்பது பற்றிச் “சனனப் பெருவேரைக் கல்லி எறிந்து” என்றும், அது நீங்கிய வழி ஞான நாட்டம் தோன்றி ஞானப் பொருளாகிய முருகப் பெருமானது, காட்சி பெறுவித்தலால், “நின் உருவைக் கண்களாரக் கண்டிலனே” என்றும் இயம்புகிறார். சனனம் - பிறவி. பிறவிக்கு காரணமாகிய மலம் அனாதி தொடர்புடையது என்பது குறிக்க அதனைப் “பெருவேர்” என உருவகம் செய்து, அது செய்யும் இருளை ஒழிக்கும் செயலை விளக்கும் வடலூர் வள்ளலார், “பெருவேரைக் கல்லி எறிந்து” என உரைக்கின்றார். மலத்தைப் “பெருவேர்” என்றமையின் அதனை நீக்கும் செயலைக் “கல்லி எறிதல்” என்கின்றார்.

     இதனால், தணிகை முருகனைக் கண்ணாரக் காண்பது பிறவிக் கேதுவாகிய மூலமல மறைப்பைக் கெடுத்தற் கேதுவாம் என்பதாம்.

     (2)