பக்கம் எண் :

41. அருள்நிலை விளக்கம்

    அஃதாவது, திருவருளின் நல்விளக்கத்துக்குச் சான்று பகர்தலாம். இதன்கண் கருங்குழியில் இறைவன் திருமுன் நீர் பெய்த விளக்கு எரிந்தமை தெரிவிக்கிறது.

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3028.

     மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்
          கில்லைஎன்றார் மேலோர் நானும்
     பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி
          கின்றேன்ஓர் புதுமை அன்றே
     செய்விளக்கும் புகழுடைய சென்னநகர்
          நண்பர்களே செப்பக் கேளீர்
     நெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும்
          எரிந்ததுசந்நிதியின் முன்னே.

உரை:

     நன்செய்கள் சூழ்ந்து, அழகு திகழும் சென்னப்பட்டினத்து நண்பர்களே, நான் சொல்வது கேண்மின்; மெய்ம்மை மொழியும் விளக்கமே விளக்காவது; வேறு விளக்குகளல்ல என்று சொல்லினர் திருவள்ளுவர் முதலிய மேலோர்கள்; நான் பொய் புகல்வதே விளக்காமென்று கருதி மகிழ்ச்சி மிகுகின்றேன்; அது ஒரு புதுமையாகாது; இறைவன் திருமுன்பு நெய் பெய்தெரிக்கும் விளக்குப் போலவே நீர் பெய்த விளக்கும் எரிந்தது, காண். எ.று.

     வள்ளற் பெருமான் காலத்தில், சென்னை நகரிற் கோட்டை யிருக்கும் பகுதி சென்னப்பட்டினமும் அதற்கு வடக்கில் திருவொற்றியூர், மேற்கில் எழுமூர், தெற்கில் திருமயிலாப்பூர், திருவான்மியூர் ஆகிய வூர்களும் பழம் பெருமையுடன் விளங்கின. இவ்வூர்கள் யாவும் நன்செய் வயல்கள் மிக்கு நெல் விளையும் நீர்மையுடன் புகழ் விளங்கியிருந்தனவாகலின், “செய்விளக்கும் புகழுடைய சென்னநகர்” என்று சிறப்பிக்கின்றார். மருத வளமுடைய குடி யிருப்புகளையே தமிழர் ஊர் என்பர். இப்பகுதி அந்நாளில் சென்னப்பனென்ற நாயக்கர் தலைவன் காவலிலிருந்தமையால் ஆட்சியாளர் சென்னப்பட்டினம் என்றனர்; பட்டினம் - கடற்கரையிலுள்ள ஊர். கோட்டை யிருக்கும் பகுதி மதுரேசன் என்ற மீனவனுக்கும் உரியதா யிருந்தமையின், ஆங்கிலேயர், அதனை மதுரேசு பட்டினம் என்று மொழிந்தனர்; அது நாளடைவில் மதராசு என மருவிவிட்டது; தமிழர் சென்னை என்பாராயினர், “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைத்தலைக் கொண்டு, “மெய் விளக்கே விளக்கல்லால் வேறு விளக்கில்லை என்றார் மேலோர்” என மொழிகின்றார். தாம் பொய் பெரிது பேசி யொழுகியதாக உலக நெறி பற்றி யுரைக்கின்றாராகலின், “நானும் பொய் விளக்கே விளக்கென உட்பொங்கி வழிகின்றேன்” எனக் கூறுகிறார். உலகில் எவரும் தாம் பேசுவது பொய்யே யாயினும் பொய்யென்று கூறுவ தின்றித் தூய மெய் யென்றே சொல்லுவது உலகியல். அதனை யறிந்தே, “பொய் விளக்கே விளக்கென வுட்பொங்கி வழிகின்றேன்” என்று புகல்கின்றாரெனத் தெளிக. நெய் பெய்து விளக்கெரிவித்தல் நாட்டவர் செயல்; வடலூர்க் கருகிலுள்ள கருங்குழி யென்றவூரில் இருந்த போது, வள்ளற் பெருமான் ஒருநாள் இரவு ஓரறையில் இறை வழிபாடு புரிகையில் ஆங்கெரிந்த நெய் விளக்கிற்கு, எண்ணெய் குறைந்ததாக அருகே ஒரு செம்பிலிருந்த தண்ணீரை நெய்யென எண்ணி அவ்விளக்கிற் பெய்யவும், விளக்கு இனிது எரிய லுற்றது. பூசை யறை இறைவன் எழுந்தருளும் திருமுன்பாகலின், அப்பெருமான் திருவருளால் நீரும் நெய்யாய் எரிந்தது என்று மகிழ்ந்தாராகலின், “நெய் விளக்கே போன்றொரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சன்னிதியின் முன்னே” என எழுதுகின்றார். இது போல் ஆயிரத்து முந்நூறாண்டுகட்கு முன் திருவாரூரில் நமி நந்தி என்ற சிவத்தொண்டர், இறைவன் திருமுன் நீர்பெய்து விளக்கெரித்தார் என்பாராய், “ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடறியு மன்றே” (ஆரூர்.விருத்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

     இவ் வருட்பாட்டுச் சென்னையில் இருந்த இறுக்கம்இரத்தின முதலியார்க்கு வள்ளற் பெருமான் எழுதி விடுத்த தென்று வரலாறு கூறுகிறது.

     (1)



     வரலாற்று முறை நான்காம் திருமுறைக்கு உரைவேந்தர் உரை முற்றிற்று.