பக்கம் எண் :

3061.

     ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
          உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
     அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
          அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
     களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
          கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
     தெளிவண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
          தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.

உரை:

     தெளிந்த ஞானமுடைய பெரியவர் மிக்க அன்பு கொள்ளும்படி, அம்பலத்தில் தெய்வத் திருக்கூத்தாடுகின்ற சிவநெறிச் செம்பொருளே, ஒளித் திருவடி, வெளித் திருவடி என இரண்டாக வகுக்கப்பட்டனவும், வேதாந்த மென நிற்கும் உயர் நூல்கள் பாராட்டுவனவுமாகிய திருவடியிரண்டும் கனிந்து வருந்தும்படி நடந்து அடியவனாகிய யான் அடைப்பட்டிருந்த வீட்டினை யடைந்து கதவைத் திறக்கச் செய்து, எனக்கு மகிழ்ச்சி யுண்டாகுமாறு என்னைத் தன் பக்கல் அழைத்து என் கையிடத்தே அரியதொன்றைக் கொடுத்தருளிய கருணைச் செயலின் தன்மையை மறவாது நினைவிலிருத்தும் முறை யாது அறிகிலேன். எ. று.

     ஒளியும் அது பரவி நிற்கும் வெளியும் எனப் பிரிந்துள்ள இரண்டையும் இறைவன் திருவடியாக நிறுத்திப் பாராட்டுதலால், “ஒளிவண்ணம் வெளிவண்ணம்” எனவும், வேத நூல்களின் மேன் முடியாகக் கூறப்படும் உபநிடதங்கள் தம்முடைய முடிமேற் கொண்டு பராவுதல் விளங்க, “அனந்த வேத உச்சி யெலாம் மெச்சுகின்ற உச்ச மலரடிகள்” எனவும் இயம்புகிறார். வேத வுச்சி-வேதாந்தமாகிய உபநிடதம். “ஓரும் வேதாந்த மென்ற உச்சி” எனக் குமரகுருபரர் கூறுவது காண்க. முற்றக் கனிந்த பழத்தை 'அளிந்த பழம்' என வழங்கும் முறை பற்றி நடையாற் கன்றிய திருவடியை “அளிவண்ணம் வருந்தியிட” என வுரைக்கின்றார். களிக்கும் வண்ணம் - களி வண்ணம் என வந்தது. கையில் வண்ணமளித்த - கையில் தவறி வீழாதபடி அழகுற அளித்த, கருதும்வண்ணம் - என்றும் மறவாதபடி மனத்திற் கொள்ளும் திறம். ஞானத்தால் தெளிவுற்ற சிந்தையை யுடைய பெருமக்களைத் “தெளிவண்ண முடையர்” எனச் சிறப்பிக்கின்றார். அகளமாகிய சிவ பரம் பொருள் கூத்தப் பிரானாய்ச் சகளீ கரித்து நடிப்பது விளங்க, “பொதுவில் நடம் புரிகின்ற சைவ பரம் பொருள்” என வுரைக்கின்றார். சிவாகமங்களால் துணிந்துரைக்கப்படும், பரம்பொருள் என்றற்குச் “சைவ பரம் பொருளே” எனக் கூறுகின்றார். சிவாகமங்களைச் சைவ நூல் என்பது வழக்கம். “வேத நூல் சைவ நூல் என்றிரண்டே நூல்கள்” எனச் சிவஞான சித்தியும் குறிப்பது காண்க.

     (2)