307. இலக்க மறியா விருவினையால்
இம்மா னிடமொன் றெடுத்தடியேன்
விலக்க மடையா வஞ்சகர்பால்
வீணாட் போக்கி மேவிமனத்
தலக்க ணகற்றும் பொய்வாழ்வில்
அலைந்தேன் தணிகை யரசேயக்
கலக்க மகன்று நின்னுருவைக்
கண்க ளாரக் கண்டிலனே.
உரை: தணிகைப் பதி மேவும் அருளரசே, அடியேன், குறிக்கோள் அறியலாகாத இருவினை காரணமாக இந்த மனிதப் பிறவி யொன்றை யெடுத்து நீக்கமில்லாத வஞ்ச நெஞ்சமுடையவரோடு கூடி நாட்களை வீணாக்கி மனத்தின்கண் பொருந்தி வருத்தம் விளைவிக்கும் பொய்யான வாழ்வில் தோய்ந்து அலைந்தேனாதலால், உளதாகிய அக் கலக்கம் ஒழிந்து தெளிவுற்று நின் திருவருவைக் கண்ணாரக் காணேனாயினேன், எ.று
பிறவியெடுப்பதற்கு வேண்டும் குறிக்கோள் இன்னதென அறியாமையால் எண்ணிறந்த இருவகை வினைகளையும் செய்ததன் பயனாக இம் மனிதப் பிறப்பை எடுத்திருக்கிறேன் என்பாராய், “இலக்க மறியா இருவினையால் இம்மானிடம் ஒன்று எடுத்து” என வுரைக்கின்றார். இலக்கம் - குறிக்கோள். இஃது இலக்கு எனவும் வழங்கும். “குறிக்கோளிலாது கெட்டேன்” (கொண்டீர்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. வினைவகைகளைச் செய்தவண்ண மிருத்தலால், உண்மை யறிவுற்றுக் குறிக்கோளை யுணர மாட்டாமை புலப்பட, “இலக்கம் அறியா இருவினையால்” எனக் கூறுகிறார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” (சிவஞானபோதம்) என்று பெரியோர் கூறுவர். பிறவிக்குக் காரணமும் காரியமுமாம் தொடர்புடைமை பற்றி, “இருவினையால் இம்மானிடம் ஒன்றெடுத்தேன்” என்று இசைக்கின்றார். இப்பிறவியில் உற்றாரும் உறவினரும் நண்பரும் பகைவரு மெனப் பலதிற வுருவில் வஞ்சகர் சூழ்ந்து பிணித்தலால் நீங்க மாட்டாமை விளங்க “விலக்கமடையா வஞ்சகர்பால் வீணாள் போக்கினேன்” என்கின்றார். விலக்கம் - விலகுதல்; நீங்குதல் நீக்கமென வருதல் போல, விலகுதல் விலக்கமென வந்தது. நிலையுத லின்றிப் பொய்படும் தன்மை யுடையதாயினும் வாழ்வின்பால் உளதாகும் பற்று மனத்தின்கண் பொருந்திப் பல்வகை ஆசைகளை யெழுப்பி வருத்தம் உறச் செய்தலால், “மேனி மனத்து அலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன்” என்று கூறுகின்றார். அலக்கண் - துன்பம். கலக்கமின்றித் தெளிந்த ஞானத்தாலன்றித் திருவருட் பேறு எய்தா தெனச் சான்றோர் வற்புறுத்துவதால், பொய் வாழ்வில் அலைந்தமையால் அறிவு கலங்கியதை, கண்களாளக் கண்டிலன்” என்றும் உரைக்கின்றார்.
இதனால், பொய் வாழ்வால் அலைப்புண்ட கலக்கம் நீங்கி நின் திருவடி ஞானத்தால் திருவுருவைக் கண்ணாரக் காண்டல் வேண்டும் என்பதாம். (7)
|