|
3073. கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
உரை: தானே தனிமயமும் சின்மயமுமாகிய பொன்னம்பலத்தில் இன்பத் தனிக் கூத்தாடும் தத்துவப் பேரொளியாகிய சிவபெருமானே, கல்லின் தன்மையைக் கெடுத்து உருகுவிக்கும் திருவடிகள் வருந்தும்படி, கடைப்பட்ட புலைத் தன்மையை யுடைய யான், இருக்குமிடத்தைத் தேடி நடந்து வந்து பழமையான இருள் செறிந்த இரவுப் பொழுதில் கதவைத் திறக்கச் செய்து மனத் துணிவுடன் என்னைத் தன்பால் அழைத்து என் கையில் தூய தொன்றை நல்கி வன்மைப் பண்பில்லா மனத்துடன் வாழ்க என உரைத்தருளிய பெரிய மாணிக்க மணியாகிய நின்னுடைய திருவருளின் வளமை நலத்தை என்னென்று புகழ்ந்துரைப்பேன். எ.று.
சிவ பரம் பொருளின் தனிச் சிவமாம் தன்மை ஈண்டுத் “தன்மயம்” என்றும், அது இத்தன்மைய தென விளக்குதற்குச் “சின்மயம்” என்றும் உரைக்கின்றார். சித்து மயம், சின் மயம்; அஃதாவது தூய ஞான மயம் என்பதாம். அம்பலத்தின்கண் நிகழும் ஆனந்தத் திருநடனம் “இன்பத்தனி நடம்” எனப்படுகிறது. நில முதல் நாத மீறாகவுள்ள தத்துவக் கூறுகள் யாவும் உணர்வொளிகளாதலின், எல்லாமா யிருக்கின்றமை பற்றித்
“தத்துவப் பேரொளி” என்று கூறுகின்றார். கல்லைக் கனிவிக்கம் உருவும் ஒளியு முடையனாதலால், “கன்மயமும் கனிவிக்கும் திருவடிகள்” என்று இயம்புகின்றார். “கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பனாக்கினாய்” (சதக) என மணிவாசகரும் கூறுவது காண்க. புலைத் தன்மையாற் கடைப் பட்டேன் என்றற்கு,
“கடைப் புலையேன்” என்று கூறுகின்றார். எல்லா வுலகங்களும் பொருள்களும் ஒளித்திரள்களும் ஒடுங்குமிடத்து இருளே பரந்து திணிதலால், “தொன்மயமாம் இருள்” என உரைக்கின்றார். ஞாயிறு முதலியவற்றின் தோற்றத்துக்கு முன்னையதாதலால், இருளிரவைத் “தொன்மயமாம் இரவிடை” எனக் கூறுகின்றார். ஒளியும் ஒளிப் பொருளும் கலந்திருப்பினும் இருளே மிக்கிருத்தலைப் புலப்படுத்தற்கு, “மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம்” (முருகு) என நக்கீர தேவ நாயனார் நவில்வது காண்க. மனையினுள்ளார் பிறரிருக்கத் தன்னைத் தெளிந்து அவரிற் பிரித்தழைத்தமை விளங்க, “துணிந்தழைத்து” என்றும், இறைவன் நல்கியது இன்னதெனத் தெளிவு படாத ஒன்றெனினும் தூய தொன்று என்பாராய், “தூயவொன்று” என்றும் சொல்லுகின்றார். அன்பால் மனம் மென்மையுற்றாலன்றி உலக வாழ்வு இனிதாகா தென்ற உண்மை புலப்பட, “வன்மையில்லா மனத்தால் வாழ்க” என அறிவுறுத்தமை கூறுகின்றார். மாமணி - மாணிக்க மணி; மாணிக்க மணி போலும் மேனி யுடையனாதலால், “மாமணி” எனக் குறிக்கின்றார். இரவிரு ளெனக் கருதாமல் தானே தேடி வலிய வந்து அருளுவதை வியந்து கூறுகின்றமையின், “திருவருளின் வன்மையை என்னென்பேன்” என இயம்புகின்றார். (14)
|