3101. மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
பணைக்கதவந் திறப்பித்துப் பருந்தழைத்து மகனே
நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
தின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தனித்தாய் நினக்கு
நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியெ.
உரை: கூத்துக்கு அரசாய் மாணிக்க மணியாய்த் திகழ்கின்ற பெருமானே, நெடுமால் அன்று திரிவிக்கரமனாய் உயர்ந்தளந்த அண்டங்களுக்கு அப்பாலும் விளங்குகிற தாமரை போன்ற திருவடிகள் வருந்த மகிழ்ச்சியுடன் நடந்து மண்பால் வாழ்வையே நினைக்கின்ற சிறுமை யுடையவனாகிய யான் இருக்கும் இடத்துக்குப் போந்தருளி, பெருத்தகதவைத் திறக்கச் செய்து அன்புடன் என்னைத் தன் முன்னே அழைத்து, “மகனே, நீ நினைத்தபடி யாவும் உனக்குக் கைவரும்; யான் தரும் இது தூயதாம் ஒன்று” எனச் சொல்லி என் கையில் கொடுத்தருளினாய்; இதற்கு நான் நினைத்த நன்றி யொன்றும் என்பால் இல்லை; நின்னுடைய திருவருளின் நலத்தை நாயினும் கடையனாகிய அடியேன் யாது நவில்வேன். எ.று.
திருமால் உலகளந்த காலத்தில் அண்டமுற நிமிர்ந்து நின்று அயந்தானெனப் புராணம் கூறுதலால், “மால் நினைத்த அளவெல்லாம்” என்று கூறுகின்றார். மால் அளந்த அண்டமும் கீழ்ப்பட அதற்கு மேலும் சிவபெருமான் திருவடி யோங்கி யிருப்பது உணர்த்தக் “கடந்து அப்பாலும் வயங்கும் மலரடிகள்” என உரைக்கின்றார். நடப்பது வருத்தம் தருவதாயினும் மிக்க உவகையுடன் நடந்தது தோன்ற “மகிழ்ந்து நடந்தது தோன்ற “மகிழ்ந்து நடந்தருளி” என இசைக்கின்றார். மண்ணுலகுக்கு அப்பாற் செல்லுதல் இல்லாத சிறுமை நினைவேயுடையவன் என்று தம்மைக் குறித்தற்கும் “பால் நினைத்த சிறியேன்” எனப் பகர்கின்றார். பணைக் கதவு - பெரிய கதவு. வீடுகளில் தலைவாயிற் கதவுகள் பெருத்துயர்ந்து இருப்பது இயல்பாதலால், “பணைக்கதவம் திறப்பித்து” எனவும், அழைப்பவர்பால் அச்ச முண்டாகாதபடி இன்முகமும் அன்பு மொழியும் கொண்டு அழைத்தமை புலப்பட, “பரிந்தழைத்து” எனவும், தாம் தருவதை மறுக்காமல் ஏற்பது வேண்டி, தருமிது உனக்கு நீ நினைத்த நலம் அனைத்தும் இனிது கைகூடச் செய்வதுடன் தூய்மையானது என்பாராய், “மகனே, நீ நினைத்த வண்ணம் எல்லாம் கைகூடும் இது ஒரு நின்மலம்” எனவும் இசைக்கின்றார். நினைத்தது முடித்தளிக்கும் நின்மலப் பொருளை வலிய வந்து தந்தவர்க்கு எத்தகைய நன்றி செலுத்த வேண்டுமென நினைத்தாரோ அது வாயாமைக்கு வருந்துகின்றமை தோன்ற, “நினக்கு நான் நினைத்த நன்றி யொன்றும் இலையே, இன்னருளை நாயடியேன் என்புகல்வேன்” என்று கண்கலுழ்கின்றார்.
இதானல், நினைத்த நன்றி யொன்றும் செய்ய மாட்டாமைக்கு வருந்தியவாறாம். (42)
|