3149. வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்கும் தருணம்
வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
உரை: தில்லையம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றும் எங்கட்குப் பெருஞ் சோதியாய் விளங்குபவனே, பசுத் தன்மை யுண்டு பண்ணும் மலம் கெட்டு வானத்தே படிய, ஆன்மா சுத்தமாய்த் தனிமையுறும் காலத்தில், விளக்கமும் மேலான இன்ப சுகப்பிரபை என்னை வளைத்துக்கொள்ளும் காலத்தில், தான் அதுவதுவாய் இயல்பாய்க் கூடும் தருணத்தில் நடையின்றி யெய்தும் தன்மை யுருவாகிய திருவடிகள் பிரகிருதியாகிய மண்ணிற் பொருந்தி நடந்து எளியனாகிய யான் இருக்குமிடத்துக்கு வந்து, அழகிய கதவு திறக்கச் செய்து, மகிழ்ச்சியுடன் அவ்விடத்துக்கு என்னை வருவித்து எனக்கு இனிமை தருவ தொன்றைத் தந்தருளினாய்; உனது திருவருளை என்னென்று பாராட்டுவேன். எ.று.
உயிரை அனாதியே பிணித்திருந்த மலம் கெட்ட விடத்து என்னாம் என்பார்க்கு விடை கூறுவார் போல, மலம் மறைக்கும் தன்மை கெடின் தூய ஞானாகாச வெளியாம் என்றற்கு “வானதுவாய்” என்றும், உயிரைப் பிணித்து இருள் செய்தமை பற்றிப் “பசு மலம்” என்றும் கூறுகின்றார். ஏனை மாயா மலம், கன்ம மலங்களை விலக்கி மூல மலத்தைக் காட்டற்கு இவ்வாறு கூறுகின்றார் எனினும் அமையும். தனித்து நிற்கும் தருணம், மலம் கழிந்த சுத்தாவத்தை எனப்படும். ஆன்மா எப்போதும் சுகானுபவத்தையே நுகரும் இயல்பிற்றாகலின், சுத்த நிலையில் அது பெறுவது இதுவென்பார், “வயங்கு பரானந்த சுகம்” என வுரைக்கின்றார். ஆங்கு நுகரப்படும் பேரின்பம் பிறிது யாதும் நோக்காமல் தன்னையே நோக்கித் தன்னிலே கிடந்து தன்னையே நுகர்ந் துரைவித்தலின், “வளைத்துக் கொள்ளும் தருணம்” என்றும், அந்தக்காலத்தில் பேரின்பம் நுகரும் ஆன்ம நிலைமை “தானதுவாய் அது தானாய்ச் சகசம் உறும் தருணம்” என்றும் இயம்புகின்றார். சுகானுபவத்தின்கண் சகலானுபவத்தில் தடையேதும் அறவே இல்லாமை வற்புறுத்தற்குத் “தடையற்ற அனுபவமாம்” என வுரைக்கின்றார். மான், முதலாகு பெயராய், நிலத்துக்காயிற்று. மானென்னும் முலப் பகுதியிலிருந்து நில முதலியன தோன்றுவன என அறிக. மண்ணின் மேல் மக்களுருவில் நடந்து போந்தமை யுணர்த்தற்கு “மானதுவாய் நடந்து” எனக் கூறுகின்றார். மணிக் கதவம்-அழகிய தலைவாயிற் கதவு.
இதனால், சுத்தாவத்தையின்கண் ஆன்மா பெறும் சுகானுபவம் தெரிவித்தவாறாம். (90)
|