பக்கம் எண் :

3150.

     புன்றலைஎன் தலையெனநான் அறியாமல் ஒருநாள்
          பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
     இன்றலையின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
          இருக்குமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
     மன்றலின்அங் கெனை அழைத்தென் கையில்ஒன்று கொடுத்தாய்
          மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
     பொன்றலிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
          புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.

உரை:

     இறத்த லில்லாத சித்தர்களும் முத்தான்மாக்களும் எதிர் நின்று போற்றித் துதிக்க, அழகிய அம்பலத்தின்கண் பாம்பாட ஆடல் புரிகிற ஒளி திகழும் பெரிய மாணிக்க மணியாகிய பெருமானே, அன்றொரு நாள் என் தலையை யொரு புன்றலை யெனக் கருதாமல் பொருந்தியபோது மிகச் சிவப்புற்ற நின்னுடைய, அழகிய திருவடிகள் இன்று தெருவில் மிகவும் வருந்திச் சிவக்க நடந்து எளியனாகிய யான் இருக்குமிடத்தை அடைந்து கதவைத் திறக்கச் செய்து, தாம் இருக்குமிடத்துக்கு என்னை வருவித்து என் கையில் ஒன்றைக் கொடுத்தருளினாய்; அதற்கேதுவாகிய நினது பெரிய கருணையை என்னென்று பாராட்டுவேன். எ.று.

     இறப்பின் எல்லையைக் கடந்த பெருமக்களாதலின், “பொன்றவிலாச் சித்தர் முத்தர்” எனப் புகழ்கின்றார். புயங்கம் - பாம்பு; பாம்பலங்காரப் பரமனாதலால், “புயங்க” என வுரைப்பினும் பொருந்தும். புன்றலை ஞானச் சிறப்பில்லாத தலை. தீக்கைகளாற் சிறப்புறாத தலையென்றலும் உண்டு. பொருத்துதல்-திருவடியிற் பட வணங்குதல். சிவந்த நிலையை யுணர்த்தற்குச் “சிவந்து பொருந்திய பொன்னடி” என்று புகல்கின்றார். அலைவு-தெருத்தெருவாக நடந்து திரிதல். மன்றல் - மேடையுமாம். தெளிவு குறிக்கும் மன்றவென்னும் சொல் மன்றலின் என வந்தது என்றுமாம். மன்னவன் - என்றுமுள்ள அப் பரம்பொருள்.

     இதனால், பரமன் தானே தன் திருவடியைத் தலைமேல் வையாத போது நாமே பொருந்த வைப்பது பொருந்தாது எனத் தெரிவித்தவாறாம்.

     (91)