பக்கம் எண் :

3156.

     வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
          மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
     துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
          துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
     உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
          உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
     வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
          மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.

உரை:

     மண்ணுலக மக்களும் விண்ணுலகத் தேவர்களும் இனிது வாழும் வண்ணம் அழகிய அம்பலத்தின்கண் பெரிய திருக்கூத்தையாடுகின்ற அருளரசே, வெவ்விதாகிய பிறவி வெப்பத்தால் மேனி மிகவும் இளைத்து மெலிவுற்ற மெய்ம்மை அடியார்க்கெல்லாம் விரும்பத்தக்க குளிர்ந்த சோலை நல்கும் தூய நிழலாய், அமுதமாய், தளர்ச்சி யனைத்தும் போக்கி யருளும் இரண்டாகிய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த, அடியேன் உய்யுமாறு இரவுப் போதில் யான் இருக்குமிடத்துக்கு நடந்து வந்து வாயிலில் உயர்ந்து நிற்கும் கதவைத் திறக்கச் செய்து மனமகிழ்ச்சியுடன் என்னைத் தன் பக்கம் வருவித்து ஒன்றைத் தந்தருளினாய்; இவ்வாறு வலிய வந்து நல்கும் அருள் வளமை வேறே யாவரிடத்து உளதாம். எ.று.

     எல்லாவுலகங்களிலுமுள்ள உயிர்த்தொகை யனைத்தும் ஞானத்தால் வீடு பெறல் வேண்டு மென்ற பேரருளால் இறைவன் நடுவுமாகிய மண்ணுலகில் தில்லையம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்றான் என்ற கருத்து இனிது விளங்குதல் வேண்டி, “வையகமும் வானகமும் வாழ மணிப் பொதுவில் மாநடம்செய் அரசே” எனவுரைக்கின்றார். பிறந்திருந் திறந்துழலும் வாழ்வில் செய்வினைகளால் கோடை வெப்பம் போல் சுடப்பட்டு மக்கள் வருந்துவது பற்றி, உலகியல் வாழ்வைக் கோடைப் பருவமாகக் கூறும் முறைமை கொண்டு, “வெய்ய பவக்கோடை” என்று விளம்புகின்றார். உண்மை யன்பு நெறியிலே வாழ்கின்ற நன்மக்கட்கு அதுவே நல்ல தவமாகலின், அது கெடாமைப் பொருட்டுப் பிறவி வெம்மையால் உடல் மெலிந்து கருகி உள்ளம் சோர்ந்து இளைக்காமை கருதி, கோடை வெப்பம் தணிக்கும் சோலை நிழலும், நிழலிடத்தே இருந்து பெறலாகும் அமுதமும் போல இறைவனுடைய திருவடிகள் இரண்டும் உள்ளன என்பாராய், “மிக இளைத்து மெலிந்த மெய்யடியார் தமக்கெல்லாம் விரும்பு குளிர் சோலைத் துய்ய நிழலாய் அமுதாய் மெலிவனைத்தும் தவிர்க்கும் துணையடிகள்” என்று துதிக்கின்றார். வெம்மையை ஆற்றாமை புலப்படுத்தற்கு “மிக இளைத்து மெலிந்த மெய்யடியர்” என்றும், “குளிர் சோலை” என்ற வழி, அதன் நிழலின் குளிர்ச்சி நாடிச் சென்று தங்குதற்கும், தங்கியுடல் குளிரினும் உள்ளுறு பசித் தீயடங்கற்கு உணவு கொள்ளுதற்கும் வாய்ப்புடைய தென மொழிவாராய், “சோலைத் துய்ய நிழலாய் அமுதாய் மெலிவனைத்தும் தவிர்க்கும் துணையடிகள்” என்றும், தங்குதற்கு விருப்பமுண்டாதல் வேண்டித் “துய்ய நிழல்” என்றும் சொல்லுகின்றார். திருவடிகளையே நினைந்து கிடப்பவன் எனத் தம்மை, “அடியேன்” எனக் குறிக்கின்றார். யான் உய்தி பெறல் வேண்டுமென்ற திருவுள்ளத்தால் நடந்துவந்தார் எனற்கு, “அடியேன் உய்ய” எனக் கூறுகின்றார்.

     இதனால், அடியேன் உய்திபெறல் வேண்டுமென்ற அருள் உள்ளமே இரவில் தம்பால் நடந்து வந்ததற்குக் காரணம் எனத் தெரிவித்தவாறாம்.

     (97)