பக்கம் எண் :

3159.

     உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
          உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
     திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
          திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
     இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
          இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
     புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
          பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந்தனனே.

உரை:

     தில்லையம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றும் சிவ பரம் பொருளே, சிறியவனாகிய என்னுடைய உணர்வின்கண் எழுந்தருளி, உலகியலையும் அருளியலையும் ஒருங்கே யான் அறிந்து கொள்ள உணர்வு தந்து, என் உயிர்க்குயிராய் விளங்கித் திலகம் போன்று என் தலையின் கண் பொருந்திய திருவடிகள், மண்ணிற் பொருந்தி வருந்த நடந்து அடியவனாகிய யான் தங்குகின்ற மனைக்கு இரவில் வந்து கதவைத் திறக்கச் செய்து, என்னை இனிதழைத்து என் கையில் ஒன்றை மகிழ்ச்சியுடன் தந்து, “இன்னும் பன்னெடு நாட்கள் புலவர்கள் போற்ற வாழ்வாயாக” என்று உரைத்தருளினாய்; ஆதலால், உனது திருவருளே மெய்ப்பொருள் என்று தெரிந்து கொண்டேன். எ.று.

     உலகிய லறிவும் சிவநெறித் திருவருட் சமய வாழ்வியலும் இளமைக் காலத்தே தமக்கு இறைவன் திருவடி ஞானத்தால் உண்டாயின எனத் தெரிவிப்பராய், “உலகியலோடு அருளியலும் சிறியேன் உணர்விலிருந்து உணர்த்தி” என வுரைக்கின்றார். முன்னே நின்று உணர்த்தாமல் உணர்வின்கண் உள்ளுணர்வாய்த் தங்கி இறைவன் திருவடி யுணர்த்திய செய்தி இனிது தோன்ற, “உணர்விலிருந்து உணர்த்தி” எனவும், உணர்வு உயிர்க்கு உருவாதலால், “உயிர்க்குயிராய் விளங்கி” எனவும், இயம்புகிறார். தலையின்கண் விளங்கும் திருவடி திலகமணி யிழைத்த முடி போல்கிற தென்பார், “திலகமெனத் திகழ்ந்து எனது சென்னிமிசையமர்ந்த திருவடிகள்” என்று இசைக்கின்றார். “திலக நீண்முடித் தேவர்” (சீவக. 246) எனப் பிறரும் கூறுவது காண்க. தாம் தங்குதற் கமைந்த மனை திருவருட் பேற்றுக்கு வாய்ந்த இடமாதலால், “இலகுமனை” எனவும் அன்பால் இன்ப முண்டாக அழைத்தமை விளங்க “இனிதழைத்து” எனவும் சிறப்பிக்கின்றார். புலவர்-கற்று வல்ல அறிஞர்; தேவர்களுமாம்.

     இதனால், திருவருள் ஞானப் பேற்றால் நீடு வாழ்க என வாழ்ந்த பெற்றமை எடுத்தோதியவாறாம்.

     (100)