பக்கம் எண் :

3.பிரசாத மாலை

    அஃதாவது, இறைவன் அருளிய திருவருட் பிரசாதத்தை நினைந்து பாடிய பாட்டுக்களாலாகிய சொல் மாலை. இதன்கண், இறைவன் மக்களினத்துச் சான்றோர் உருவில் வந்து திருநீறும் பூவும் அளித்தசெய்தி வியந்து பாராட்டப் படுகிறது. இதனைப் பெருந்திணை நங்கையின் கூற்றாகக் கருதுவதும் உண்டு.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3160.

    திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
        திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்பூ அளிக்கத்
    தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
        தயாநிதியே திருநீரும் தருகஎனக் கேட்ப
    மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
        மகிழ்ந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
    குருஉருக்கொண் டம்பலத்தே அருள் நடனம் புரியும்
        குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.

உரை:

     குரு வடிவந் தாங்கித் தில்லையம்பலத்தின்கண் அருள் நடனம் புரிகின்ற செம்மணியே, முன்னை நாளையிலேயே என்னையாளாகக் கொண்டருளிய குணத்தின் குன்றமே, சிறியவனாகிய என் முன்பு திருவுருவந் தாங்கியெழுந்தருளி, திருநீற்றுப் பையை யவிழ்த்து, சிவந்த ஒளியுடைய பூ வொன்றைத் தந்தருளினாயாக, அடியற்ற மரம்போல ---நின்னை வணங்கி வாங்கிய பின், அருள் நிதியே, திருநீறும் தந்தருள்க என மீண்டும் நான் கேட்க, இப்போது பொருந்திய உருவங கொண்டு அன்றே வந்து உனக்கு அருளினோம்; இன்று திருநீறும் அருளுகின்றோம் என்று திருவாய் மலர்ந்து நின்றாய்; பெருமானே, உன் அருட்டிறத்தை என்னென்பேன். எ.று.

     மக்கள் உருவில் குருவாக எழுந்தருளி வந்து ஞான மருளுவது இறைவனுக்கு இயல்பாதவின், “குருவுருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குருமணியே” என்கின்றார். குருமணி - சிவந்த மாணிக்கமணி. உலகில் தோன்றும் ஞானாசிரியர்கட்கெல்லாம், முடிமணியாக விளங்குபவனே என்றற்குக் “குருமணியே” என்றார் எனலுமாம். முற்படப் போந்து உயிர்களை அருள் நெறியில் ஆளாகக் கொள்வது இறைவனுக்கு முறைமையாதலின், “முன் என்னையாட்கொண்ட குணக்குன்றே” என்று கூறுகின்றார். “என்னை முன் ஆள் ஊழுடையான்” (கோவை-7) என்று திருவாதவூரரும் உரைப்பது காண்க. வடலூர் வள்ளல் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறப்புடை நிகழ்ச்சியாகக் குறிக்கின்றாராதலின், முன்பொரு நாள் சான்றோர் ஒருவர் உருவில் இறைவன் போந்து திருநீறு தந்தருளியதை, “மருவுருக் கொண்டன்றளித்தாய் திருநீறு” என்கின்றார். முன்பு வந்தபோது வணங்கிய வடலூர் வள்ளற்கு அவர் பூ வளித்ததும், அதனால், ஆராமையுற்ற வள்ளலார் திருநீறு கேட்டதும் விளங்க, “திருநீற்றுப் பையவிழ்த்துச் செஞ்சுடர்ப் பூ வளிக்கத் திருநீறும் தருக எனக் கேட்ப. மருவுருக் கொண்டன்றளித்தாம் திருநீறு” என்று விடையிறுக்கின்றார். இங்ஙனங் கூறினாரேனும், வந்து பெரியவர் பூவுடன் திருநீறும் தந்தமை புலப்பட, “இன்றுனக்கு மகிழ்ந்தளித்தாம் இவை” என்றியம்புகின்றார். “மருவுரு” என்றது முன்பு போந்த உருவிலேயே வந்தமை குறித்தது.

     இதனால், பூவளித் தாட்கொண்ட கூத்தப் பெருமான் மீண்டும் போந்து பூவும் திருநீறும் கொடுத்த குறிப்புத் தெரிவித்தவாறாம்.

     (1)