25. குறை நேர்ந்த பத்து
அஃதாவது தன்பால் உள்ள குறைகளைத்
தன்னில் தானே உணர்ந்து தணிகை முருகப் பெருமானிடம்
எடுத்தோதும் பாட்டுக்கள் பத்துக் கொண்டது.
இக்குறைகளில் பொருட் பெண்டிரின் பொய்ப் புணர்ப்பில்
வீழ்ந்து அறிவு மறைப்புண்டதும், அதனால் முருகப் பெருமான்
திருவருளை நினைந்து வாழ்த்தி வணங்கா தொழிந்ததும்,
பிறவும் இப்பத்தின் கண் பாட்டுத் தோறும் விதந்து
விளம்பப் படுகின்றன.
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய
விருத்தம்
317. வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
ஊன்பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள்
ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
உரை: அருள் வள்ளலே, தேவர்கள் புகழும் தணிகை மலையைக் கண்டு அங்கே கோயில் கொண்டுள்ள நின்னுடைய புகழ்களை மனமகிழ்ந்து கூறுவதில்லேன்; தேன் பொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுடைய மகளிர் இச்சைக்கு அடிமைப்பட்டு வீணே திரிகின்றேன்; அதனால் நாடோறும் தீய குற்றங்களைச் செய்கின்றேன்; ஊன் செறிந்த உடலை வளர்ப்பதற்காக வாழ்நாளை வெறிதே கழிக்கின்றேன்; குற்ற மிகுதியால் வீண்பழிக்கும் ஆளாகின்றேன்; ஐயோ, இவ்வாற்றாற் பாவியாகிய யான் ஏன் பிறந்தேனோ? என் குறைகளை எடுத்து இவ்வுலகில் யாவருக் குரைப்பேன், எ. று.
வான்பிறந்தோர் - விண்ணுலகில் பிறந்து வாழும் தேவர்கள். தேவர்கட்குத் தேவனாதலால் முருகனுக்குரிய தணிகை மலையை அவர்கள் அன்பால் புகழ்வது பற்றி, “வான் பிறந்தார் புகழ் தணிகைமலை” என்றும், அதனைக் கண்களால் கண்டு முருகன் புகழை மனமகிழ்ந்து பாராட்டுவது என் கடனாகவும், அதனைச் செய்கிறேனில்லை என்பார், “தணிகை மலையைக் கண்டு நின்புகழை மகிழ்ந்து கூறேன்” என்றும் உரைக்கின்றார். பின்பு தாம் செய்வன இவை என்பாராய், மகளிர்பால் உண்டாகும் காம வேட்கைக்கு ஆட்பட்டு அவர் காணத் தெருக்களில் பயனின்றித் திரிவதும், அவர் பொருட்டுத் தீமை விளைவிக்கும் செயல்களை நாள்தோறும் செய்வதுமாக இருக்கின்றேன் என்று கூறலுற்றுத் “தேன் பிறந்த மலர்க் குழலார்க் காளா வாளா திரிகின்றேன்” எனவும், “புரிகின்றேன் தீமை நாளும்” எனவும் உரைக்கின்றார். தேனுள்ள பூக்களில் மணம் கமழுமாதலின் மணமுள்ள பூ என்பதற்குத் “தேன் பிறந்த மலர்” என்று குறிக்கின்றார். இளமகளிர் கூந்தலில் எப்போதும் பூச்சூடி யிருப்பாராதலால், “மலர்க் குழலார்” என்று சிறப்பிக்கின்றார். மகளிர் ஆசைக்கு ஆளாயினார் அவர் காண ஒரு பயனின்றியும் தெருவில் திரிவராதலின், “குழலார்க் காளா வாளா திரிகின்றேன்” எனவும், அம்மகளிர்க்குத் தமது மெய் வன்மை தெரியுமாறு பிறரை வலுச் சண்டைக்கு இழுத்துத் தீது புரிவாராதலின், “நாளும் தீமை புரிகின்றேன்” எனவும் இயம்புகின்றார். உணவுண்டு உடலை வளர்த்தலும் மகளிர் நலமுண்டு காம வேட்கையை வளர்த்தலும் வாழ்வென்று கருதினமை தோன்ற, “ஊன் பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன்” என்றும், உடலோம்பி உயிர் வாழ்வது மெய்யுணர்வு பெற்று இறையருளை உணர்ந்து அதனால் இறவாப் பேரின்ப வாழ்வுக்கு உரியராவது கடனாகவும், அதனைச் செய்யா தொழிதல் பழிக்கத் தக்க குற்றமாதலை நினைந்து வருந்துகின்றமை புலப்படப் “பழிக்காளாய் உற்றேன்” என்றும் நொந்து கொள்கிறார். இக் கூறிய அனைத்தும் பிறப்பின் நோக்க மல்ல என்றும், பாவச் செயல்கள் என்றும், நினைவு கூர்ந்து மனநோயுறுதலின், “அந்தோ ஏன் பிறந்தேன், ஏன் பிறந்தேன்” எனவும், “பாவியேன் யான்” எனவும் புலம்புகிறார். இவற்றால் தமக்குற்ற குறைகளை எடுத்தோதின் அவற்றைப் பொறுத்து அருள் ஞானம் வழங்குவோர் இவ்வுலகத்தல் ஒருவரும் இல்லாமையால், “என் குறையை எவர்க் கெடுத்து இங்கு இயம்புகேனே” எனச் சொல்லுகின்றார். உடம்பு ஊனாலாகியது பற்றி, “ஊன் பிறந்த உடல்” என்று உரைக்கின்றார்.
இதனால், தணிகை முருகன் புகழைக் கூறாக் குறையும், மகளிர் இச்சைக்களாய்த் திரிந்து தீமை புரியும் குறையும், வாழ்நாளை வீணே கழித்த குறையும், பழிக்காளான குறையும் எடுத்துரைத்தவாறாம். (1)
|