3174. பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
சிவகாம வவ்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.
உரை: பொய்யாமையாகிய சிறந்த வரத்தை எனக்கு அருளிய மேலான பராசத்தியும், ஆகாயம் முதல் நிலம், நீராக வுள்ள பூதங்களை அடியாகக் கொண்ட கருவிகளாகிய தத்துவங்கள் எல்லாவற்றையும் இயைந்து உருவாக்கும் கூறுபாட்டை யுடையவளும், திருமகள் கலைமகள் உருத்திரை ஆகிய மூவரும் வணங்கிப் போற்றும் சிவகாமவல்லி என்னும் பெரிய தேவியாகிய உமையம்மை கண்டு, மனம் உவக்கும்படி தெவிட்டாத இன்பத்தைக் கொடுக்கின்ற, திருக்கூத்தை அழகிய பொன்னம்பலத்தில் மகிழ்வோடு ஆடுகின்ற தலைவனே! உன்னுடைய திருவருளை யெண்ணி மனம் வருந்தாத படி ஞானப் பேற்றுக்குரிய பக்குவம் எய்திய புண்ணியர்கள் யாவரும் விரும்பி உவகையுற நான் பாடுகின்றேன்; என்னை ஏற்றருள்க. எ.று.
உலகியலில் பொய்யாமை தலையாய அறம் எனச் சான்றோன் கூறியிருப்பினும், பொய் யுரைத்தற் கேற்ற சூழ்நிலைகள் தோன்றிப்பொய் யுரைக்கும் குற்றத்தை செய்யப் பண்ணுதலால், பொய் உரைத்தல் என்னைப் பற்றிப் கொண்டவிடத்தும் பொய்யாமையை விடாப் பிடியாகக் கைக்கொள்ளற்கு வேண்டிய திட்பத்தைத் தனக்கு நல்கியது திருவருள் எனத் தெளிகின்றாராதலின், “பொய்யாத வரம் எனக்குப் புரிந்த பரம்பரை” என்று புகழ்கின்றார். பரம்பரை - மேலான பராசக்தி. பரை, பரனுக்குப் பெண்பாற் பெயர். ஆகாயம், காற்று, தீ, நீர் என்பனவும் அவற்றின் அடியாகத் தோன்றும் கருவிகளின் தத்துவங்கள் முப்பத்தாறும் உருவாகி உயிர்கள் செயற் படுதற்குப் படைக்கப் பட்டனவாதல் பற்றி, “வான் பூத முதல் கருவியெலாம் பூட்டுவிக்கும் திறத்தால்” என்று தெரிவிக்கின்றார். இவற்றைப் படைத்தல் முதலிய செயல்களை அளித்துச் செய்யும் திறத்தையும் நல்குவது திருவருட் சத்தியாதலின், அவ்வுண்மை புலப்படக் “கருவியெலாம் பூட்டுவிக்கும் திறத்தாற்” என்று கூறுகின்றார். செய்யாள், திருமகள். உருத்திரை, ஒடுக்கும் செயலைப் பரியும் உருத்திரமூர்த்திக்குரிய சத்தி. பராசத்தியாகிய பரைக்கு இச்சத்திகள் கீழ்ப்பட்டவையாதலின் வணங்கும் என்று குறிக்கின்றார். பராசத்திக்குத் தில்லையில் சிவகாமவல்லி என்ற பெயராதலின், “சிவகாமவல்லிப் பெருந்தேவி” என்றும், அவள் கண்டு இன்புறத்தில்லையம்பலத்தில் சிவபெருமான் திருக்கூத்தாடுவது பற்றி, “தேவி உளங் களிப்ப இன்ப நடம் கனக மணிப் பொதுவில் இயற்றும் துரையே” என்றும் கூறுகிறார். சிவசத்தியாகிய தனது தொழில் இனிது இயலுதற்கு இத்திருக்கூத்துத்துணை செய்தலின் தேவி மகிழ்கின்றாள் என்பார்,
“உளங் களிப்ப” என்றும், திருக்கூத்தில் விளையும் பேரின்பம் விலக்குதற்காகதத் தெவிட்டாத சிறப்பமைந்தது பற்றி, அதனைக் “கையாத இன்ப நடம்” என்றும், முகத்தில் புன்னகை தவழத் திருவுள்ளம் கனிந்தாடுதலால், “களித்தியற்றும துரையே” என்றும் சிறப்பிக்கின்றார். திருவருட் பேறு வேண்டுவோர் பெறலருமை கண்டு மனம் வருத்தமுற்ற வழித் தொடர்ந்து முயலுதற்கு ஊக்கம் குன்றுமாதலின், “கருணையை நான் கருதி நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன்” என்றும், தமது பாட்டுக்களைக் கண்ட சிவஞானச் செல்வர்கள் பாராட்டுகின்றனர் என்பாராய், “பருவம் நண்ணிய புண்ணியரெல்லாம் நயந்து மகிழ்ந்திடவே” என்றும் உரைக்கின்றார்.
இதனால், திருவருட் பேறு நிறைந்து மனம் வருந்தாதவாறு நான் பாடினேனாக, பாட்டுக்களைக் கண்டு ஞானவான்கள் உவக்கின்றனர் என உரைத்தவாறாம். (5)
|