3179. தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
தற்பரை அம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
சின்னவய தினில்என்னை ஆளநினைக் கிசைத்தாள்
சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
உடையானே நின்னருளின் அடையாளம் இதுவே.
உரை: சிவசத்தியாகிய தனது ஒளியின்கண் உலகனைத்தையும் தாங்குகின்ற விமலையும், தற்பரையானவளும், அழகிய பராசத்தியானவளும், பெரிய ஞானகாயத்தையுடையவளும், ஞானசத்தியும், இளமை வயதிலே என்னை யாட்கொள்ள வெண்ணிய நினக்கு உடனிசைந்தவளும், சிவகாமவல்லி எனப்படுபவளுமாகிய பெரிய உமாதேவி கண்களாற் கண்டு மகிழ்வு கொள்ள, நிலைபெற்ற பொன்னாலும் மணிகளாலுமாகிய அம்பலத்தின்கண் இன்ப நடனம் செய்து விளங்குகின்ற, பெருமானே, நின்னுடைய பெரிய திருவருளையே நினைந்து மகிழ்ந்து உள்ளத்தில் நன்குணர்ந்து மனமுருகிப் பாடுகின்றேன்; எங்களை ஆளாகவுடைய நினது திருவருள் என்பால் உளது என்றற்கு இதுவே பேரடையாள மன்றோ? எ.று.
சத்தியென்பது ஒளிமயமானதாகலின், சிவசத்தியின் பேரொளியில் மூழ்கி உலகங்கள் அனைத்தும் தங்குகின்றமை புலப்படுத்தற்கு “உலகமெலாம் தன்னொளியில் தாங்குகின்ற விமலை” எனக் கூறுகிறார். விமலை - மலவிருளில்லாதவள். தான் ஒளியாயிருத்தலால் உலகனைத்தையும் தாங்கும் திறம் அவட்கு இயல்பாயிற்று. ஒளி மயமான பரிக்கிரக சத்தியாகிய மாயை சிவசத்தியின் கண்ணும், சிவசத்தி பரஞ்சோதியாகிய சிவத்தின்கண்ணும் கண்ணும் உள்ளன எனச் சிவாகம சித்தாந்தங்கள் தெரிவிக்கின்றன. தற்பரை - தானே தனக்கு மேலானவள். அருட் சத்தியாகிய சிவசத்தியினும் பெரியதும் பரமாயதுமான சத்தி வேறில்லையாதலால், தற்பரையெனவும் பரம்பரை யெனவும் பகர்கின்றார். சிதம்பரத்தை யுடையவனைச் சிதம்பரை என்கின்றார். சிதம்பரம் - ஞானாகாசம்; சித்ஞானத்தையும், அம்பரம் ஆகாசத்தையும் குறிப்பன. உமாதேவியின் தற்சொரூபம் சிவசக்தி என்பதை முடிபாகக் காட்டற்குச் “சிற்சக்தி” என வுரைக்கின்றார். சின்ன வயது - இளமைப் பருவம். வளமிக்கதாகலின், இளமையிலே ஆட்கொள்ளத் திருவுள்ளம் கொள்கின்றார். எம்பெருமான்; சிவசத்தியின் இசை விருந்தாலன்றி எண்ணம் செயல் படாதாகலின், சத்தியாகிய தேவியின் இசைவு இன்றியமையாதாதலை விளக்குதற்கு, “என்னை யாள நினக்கு இசைந்தாள்” என விளம்புகின்றார். என்றும் உள்ளதாகலின், தில்லைப் பொன்னம்பலத்தை “மன்னிய பொன் மணிப் பொது” எனச் சிறப்பிக்கின்றார். சிவத்தின் திருவருள் நலங்களை மனமார எண்ணுமிடத்து உணர்வு கூரிதாகி உள்ளம் நீராய் உருகுதலின், “நின் மாகருணைத் திறத்தை உன்னி யுவந்து உணர்ந்துருகிப் பாடுகின்றேன்” என வுரைக்கின்றார். பாடும் பணி இனிது அழகுறக் கைகூடுவதனால், திருவருளின் உதவி அகத்தேயிருத்தல் நன்கு தெரிதலால், “நின் அருள் அடையாளம் இதுவே” என இயம்புகின்றார்.
இதனால், திருவருளின் உதவி யுண்மை தெளிந்தமை தெரிவித்தவாறாம். (10)
|