பக்கம் எண் :

319.

    வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
        மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
    சேட்செல்லார் வரைத்தணிகை தேவ தேவே
        சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
    நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
        நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
    கோட்சொல்லா நிற்பரெனில் என்னா மோஎன்
        குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.

உரை:

     வானத்தில் பறந்து செல்லும் மேகம் படியும் தணிகை மலையில் எழுந்தருளும் தேவ தேவனே, சிவபெருமான் பெற்ற பெரிய செல்வ மகனே, ஒளி குறையாத நீண்ட கண்களையுடைய மகளிரது காம மயக்கத்தில் வீழ்ந்து மனம் போன போக்கிலே சென்று துன்புற்று வருந்துகின்றேன்; வாழ்நாளும் கழிகின்றது; இனி நான் என்ன செய்வேன்? நாயனைய என்னுடைய பிழையை எண்ணி நின்னிடத்தே யாவரேனும் கோட் சொல்வார் உளராயின் என் நிலைமை என்னாகுமோ? என்னுடைய குறைகளை எளியனாகிய யான் யார்க்கு எடுத்து ஓதுவோன், எ.று.

     வாட்செல்லக் கண் - ஒளி குறையாத கண்கள். காம மகளிர் கட்பார்வை காணப்பட்டார்க்குக் காமநோய் தருவதாகலின் அவர் கண்களை, “வாட் செல்லா நெடுங்கண்” என்று சிறப்பிக்கின்றார். “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு” (குறள்) என்று சான்றோர் கூறுவது காண்க. அறிவு மயங்கினார்க்கு வழிகாட்டுவது மனமாதலின், “மயலில் வீழ்ந்து மனம் போன வழிச் சென்று வருந்தா நின்றேன்” என்று கூறுகின்றார். சேண் -வானம். செல்-மேகம். மக்களைச் செல்வம் என்னும் வழக்குப் பற்றி முருகனைச் “சிவபெருமான் பெற்ற பெருஞ் செல்வமே” என்று கூறுகின்றார். நில்லாது கழியும் இயல்பிற்றாதலால், “நாள் செல்லா நின்றது” என்கிறார். சென்ற நாள் மீளப் பெறலாகாது என்பது பற்றி “இனி என் செய்கேனோ” என வருந்துகிறார். ஒருவரைப் பற்றிக் கோள் சொல்லுவோர் அவர் செய்த குற்றங்களையே தேர்ந்தெடுத்துரைப்பா ராதலால், “நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால் கோட் சொல்லா நிற்பர்” என்றும், கோட் சொல்வார் கூற்றுக்களை நீ ஏலாய் எனினும் ஒருகால் ஏற்று மனம் வேறு படுவையேல் என் நிலை பெரிதும் துன்பத்துக்கு இடமாம் என்பார், “என்னாமோ” என்றும் உரைக்கின்றார். கோளுரையை ஏற்றுமாறுபாடாத பேரருளாளனாதலால், நின்பால் முறையிடுகின்றேன் என்பாராய், “என் குறையை எடுத்தெவர்க்கு எளியேன் கூறுவேன்” என்று உரைக்கின்றார். எளியாரை யாவரும் இகழ்வர் என்பது பற்றிக் “கோட் செல்வார் உளராவர்” என்ற கருத்துப்பட “எளியேன்” என்று இயம்புகின்றார்.

     இதனால், மனம் போன வழிச் சென்று வருந்துகின்ற எனக்கு வாழ்நாள் குறைகின்றதெனக் குறை யிரந்தவாறு காணலாம்.

     (3)