பக்கம் எண் :

3203.

    அச்சோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
        அரிமுதலோர் நெடுங்காலம் பரிமுதல்நீத் திருந்து
    நச்சோல மிடவும் அவர்க் கருளாமல் மருளால்
        நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன்
    எச்சோடும் இழிவினுக்கொன் றில்லேன்நான் பொல்லேன்
        எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித்
    தச்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான்
        தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடந் தவனே.

உரை:

     ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவியார் கண்டு மகிழும்படி நடம் புரிகின்ற பெருமான், திருமால் முதலிய தேவ தேவர்கள் ஆசை முதலியன நீக்கிநெடுங்காலம் பன்முறை ஓலமிடவும் அவர்களுக்கு உடன் அருளாமல், மனமருச்சியால் வீணாள் போக்கி வினைத் திரளை மிகுவித்து நடந்துழலும் நாயினும் கடைப்பட்டவனாகிய யான், கண்டார் இரங்கத்தக்க இழிவுற்றதன் பொருட்டுக் காப்பொன்று மில்லாத பொல்லாதவனாவேன் என நினைந்து, யான் இருக்குமிடத்திற்கு வந்தருளித் தனது ஒளி மயமான பொருளொன்றை எனக்கு நல்கி மகிழ்வித்தான்; இந்த மிக்க அதிசயத்தை யான் என்ன சொல்வேன். எ.று.

     அச்சோ என்பது அதிசயக் குறிப்பு மொழி. புரிமுதல் - விரும்புதற்கு ஏதுவாகிய ஆசை. பன்னிப் பன்னி ஓலமிடுவதை “நச்சோலம்” என்கின்றார். மலமாயைகளால் மருட்சி உளதாகலின், “மருளால்” என மொழிகின்றார். கோள் - வினைப் பயன். “கொழிக்கும்” என்பதனால் மிகைப்பட ஏற்றுதல் பெற்றாம். நடை நாய் - ஓடி அலைகின்ற நாய்களை வேறுபடுத்த “நடை நாயிற் கடையேன்” எனத் தம்மைத் தாமே பழிக்கின்றார். எச்சு - இகழ்தல்; இழிக்கத்தக்க செயல் கண்டவிடத்துக் காண்பார்க்கு உளதாகும் அருவருப்பு. உண்டாகும் இழிவைக் காத்துக் கொள்ளும் பாதுகாப்பு ஒன்றும் இல்லாமை புலப்படுத்தற்கு “இழிவினுக் கொன்றில்லேன்” எனவும், இல்லாமைக்குக் காரணம் தன்பாலுள்ள பொல்லாங்கு என்றற்கு “நான் பொல்லேன்” எனக் கூறுகின்றார். சிவபெருமான் தானே மக்களுருவில் வந்தருளினார். என்பாராய், “யானிருக்கும் இடத்தில் எழுந்தருளி” என்றும், ஒளியுடைய பொருளொன்றைத் தந்தமை பற்றித் “தச்சோதி வணப்பொருள் ஒன்றெனக் களித்துக் களித்தேன்” என்றும் உரைக்கின்றார். தம் சோதி - தச் சோதி என எதுகை நோக்கி வந்தது. வணப் பொருள் ஒன்று எனக்கு ஈந்ததோடு அமையாது உவகையும் எய்தினான் என்பார், “களித்தான்” என எடுத்தோதுகின்றார்.

     இதனால், தனது சோதி வண்ணப் பொருள் ஒன்றைக் கொடுத்து, மகிழ்ந்தது தெரிவித்தவாறாம்.

     (2)