பக்கம் எண் :

3206.

    அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
        அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
    இப்பாரில் இரந்திடவும் அவர்கருளான் மருளால்
        இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
    எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
        எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
    தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
        தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.

உரை:

     ஒப்பற்ற சிவகாம வல்லியாகிய உமாதேவி கண்டு மனம் மகிழுமாறு காட்சிக் கினிய திருநடம் புரிதலையுடைய சிவபெருமான், அரிய தவத்தை யுடையவர்கள் ஆர்வமுற்று, மிகவும் வருந்தி உள்ளத்தால் எண்ணி முயன்று அருள் பெறாது இந்நிலவுலகில் ஒடுங்கியிருக்க அவர்கட்கு அருளுதலை விடுத்து, மருட்சியால் இவ்வுலகியல் இன்பத்தை நயந்து கொடிய வினைகளைச் செய்து எவ்விடத்தும் இழிவான மனம் கொண்டு அசைவுற்று அலைகின்ற என்னை ஒருபொருளாகக் கருதி யானிருக்கு மிடத்திற்குத் தேடி வந்து, தவறு படாத ஒளிமயமான அருட் பொருளொன்று தந்து என்னை ஆதரித்தான்; இந்த அதிசயத்தை என்னென்பேன். எ.று.

     அப்பா - வியப்பிடைச் சொல் அருந்தவர்கள் - அரிய தவத்தைச் செய்த பெரியவர்கள். திருவருட்பேறு குறித்து அரிய பெரிய தவத்தைச் செய்தவர்கள் அதனை விரைந்து பெறக்கடவராகவும், அவர்க்குடன் அருளாமைபற்றி, “அருந்தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று இப்பாரில் இருந்திடவும் அவர்க் கருளான்” எனவுரைக்கின்றார். விரும்பியது பெறாமையால் மிக்கவருத்தம் எய்தினமை பற்றி, “மிகவருந்தி” எனவும், வருத்தமும் தவநினைவும் உள்ளத்தின்கண் நிகழ்தலின், “உளம் முயன்று” எனவும் சிறப்பிக்கின்றார். மலமாயையின் பிணிப்பால் ஆன்மவுணர்வு மருளுறுவது இயல்பாதலின், “மருளால்” என்று சொல்லுகின்றார். அதன்காரணமாக உலகியல் வேட்கை உளதாகலின், உலக நடை விழைந்து” என்றும் அவ்விழைவு காரணமாக வினை பலவும் செய்யப்படுதலின், “வெவ்வினையே புரிந்து” என்றும், வினைப்பயனை நுகர்தற்பொருட்டு வருந்தினமை தோன்ற “எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன்” என்றும் கூறுகின்றார். இறைவன் அருளிய சிவஞானத்தை “தப்பாத ஒளி வண்ணம்” எனச் சாற்றுகின்றார். அதனால் தாம் உய்தி பெற்றதற்கு வியந்து, “என்னை அளித்தான்” என இசைக்கின்றார்.

     இதனால், அருந்தவர்கள் பெறக் கடவ நல்லருளைத் தாம் பெற்றமை உரைத்து மகிழ்ந்தவாறாம்.

     (5)