3214. என்னேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
இரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து
முன்னேமெய்த் தவம்புரிந்தார் இன்னேயும் இருப்ப
மூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன்
பொன்னேயம் மிகப்புரிந்த புலைக்கடையேன் இழிந்த
புழுவினும்இங் கிழிந்திழிந்து புகுந்தஎனைக் கருதித்
தன்னேய முறஎனக்கும் ஒன்றளித்துக் களித்தான்
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
உரை: ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவி கண்டு திருவுள்ளம் களிக்க இனிக்கக் கூத்தாடுதலை யுடைய சிவபெருமான் புரிந்த இந்த மிகப் பெரிய அதிசயத்தை என்னென்று சொல்லுவேன்; இரவு என்றும் பகலென்றும் அறியாமல் இருந்த இடத்தே அசைவின்றி யிருந்து திருவருட் பேறு குறித்து முற்காலத்தே உண்மைத் தவம் புரிந்த மேலோர் இப்பொழுதும் அதுவே செய்து கொண்டிருக்க மூடர்களில் முன்னவனாயிருக்கின்ற பொய் மனமுடைய கொடியவனாகிய யான், பொன்னாசை மிகக் கொண்ட புலைத் தன்மையால் கீழ்பட்ட யான் இழிக்கத் தக்க புழுவினும் மிக மிக இழிந்தவனாய் இருக்கின்ற என்னையும் ஒரு பொருளாகக் கருதித் தம்பால் பேரன்புண்டாக எனக்குத் தன் திருவருளைத் தந்து மகிழ்ந்தான். எ.று.
தனித்திருந்து இருந்த யிடத்தே யிருந்து செய்யும் சமாதி யோகிகள் சிவத்தின் பேரருள் பெற விரும்பி அஃது எய்தாமையால் இன்னும் யோக சமாதியே புரிகின்றனர் என்றற்கு “இரவு பகல் அறியாமல் இருந்த இடத்திருந்து முன்னே மெய்த்தவம் புரிந்தார், இன்னேயும் இருப்ப” என வுரைக்கின்றார். இன்னே - இப்பொழுதே. தலைநிற்றல் - முற்படுதல். வேட மனம் - பொய் மனம். பொன்னாசையால் கீழ்மைப் பட்டது புலப்படப் “்பொன்னேயம் மிகப் புரிந்த புலைக் கடையேன்” என்று புகல்கின்றார். என்பின்மையின் இழிந்த புண் எனப்படுகிறது. தம்பால் நிறைந்த அன்பின்மை தோன்றப் “புழுவினும் இழிந்தேன்” என்று நொந்து கொள்கிறார். நேயம் - உண்மை யன்பு.
இதனால், தனித்திருந்து யோக சமாதி இருப்பார்க்கும் எய்தாத திருவருள் தமக்குக் கிடைத்தமை நினைந்து வியந்து பேசியவாறாம். (13)
|