பக்கம் எண் :

3218.

    கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
        கரிசுபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
    புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
        போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
    தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
        தனிப்பொருள்என் கையிலளித்த தயவுடைய பெருமான்
    கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
        கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.

உரை:

     சிவ சிவ போற்றி, அன்று ஒருநாள் இரவு மனையின் தலைவாயிலில் ஒருகாலை வைத்துத் தனிச் சிறப்புடைய பொருளொன்றை என் கையிற் கொடுத்துதவிய அருளுடைய பெருமானே, கொலை முதலிய செயல்களால் கீழ்மக்களாயினார்க்குக் கிடைத்தற் கில்லாத குணமலையே, தில்லையம்பலத்திற் கூத்தாடிக் கொண்டே, உலகனைத்தும் காத்தருளும் குருபரனே, கலைகள் பலவும் துறைபோகப் பயிலாமல் நினது பெரிய திருவருளோடு மாறுபட்டுக் குற்றம் பல பேசி, கவலையாகிய கடலுக்குத் தெப்பமாவது நீயே என உணரா தொழிந்தேன்; புலைச் செய்கைகளால் கடையனாகிய யான் உரையால் நிகழ்த்திய குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.

     கலைக்கடை நன்கறியாமை, கலைத் துறைகளை முற்றவும் கல்லாமை. துறைபோக அறியாமையைக் கண்ட யறியாமை என்று கூறுகிறார். கடை போகக் கற்றவிடத்துத் திருவருள் ஞானத்தோடு ஊடி மாறுபடும் குற்ற முண்டாகா தென அறிக. கரிசு - குற்றம். கடல் போற் பெருகித் தோன்றுதலால், “தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக் கவலை மாற்றல் அரிது” (குறள்) எனச் சான்றோர் கூறுதலால், திருவருள் கவலைக் கடற் புணை என்றுணரேன்” என வுரைக்கின்றார். புலைச் செயல் - இழி செயல்கள். இழி செயல் புரிபவன் கடையனாதலின், “புலைக் கடையேன்” எனத் தம்மைக் குறைத்துக் கூறுகின்றார். தலைக்கடை தலைவாயில்; முதல் வாசல் எனவும் வழங்கும். தலைவாயிற் படி கடந்து வருவதை, “தாளொன் றமர்த்தி” எனக் குறிக்கின்றார். இறைவன் கொடுத்ததைத் திருவருள் எனவே மொழிகுவராதலின், “தனிப் பொருள்” என்று உரைக்கின்றார். கொலைத் தொழிலாற் கடைப்பட்டார் என்பார், “கொலைக் கடையார்” எனக் கூறுகின்றார். சலியாமை பற்றிக் “குணமலை” என்கின்றார். இறைவனது திருக்கூத்து படைத்தல் முதலிய ஐந்தொழில்கட்கு ஏதுவாகலின், “கூத்தாடிக் காத்தாளும் குருவே” எனப் புகல்கின்றார்.

     இதனால், புலைத் தன்மையாற் போந்த பிழை பொறுக்க வேண்டுமென இறைஞ்சியவாறாம்.

     (3)