பக்கம் எண் :

3220.

    துலைக்கொடிநன் கறியாதே துணைஅருளோ டூடித்
        துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
    புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
        பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
    மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம
        வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
    கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்
        கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.

உரை:

     எழுகின்ற அலைகளையுடைய கங்கையாறும் பிறைத்திங்களும் பொருந்திய சிவந்த சடையுடைய யுடையவனே, மலைமகளாகிய என் தாயும் திருவருட் செல்வியும் சிவகாமவல்லியும் வேதவல்லியுமாகிய உமாதேவி நேர் நின்று கண்டு மகிழக் கலைஞானத்தின் ஒழுங்கை நன்கறிந்த முனிவர்கள் கண்டு புகழ்ந்து துதிக்கப் பொற் சபையில் கூத்தாடுகின்ற காரண சற்குருவானவனே, நேர்மை யொழுங்கை யறியாமல் நின்று திருவருளோடு பிணங்கிக் குற்றமானவற்றை யுரைத்தேனே யன்றி நின்னுடைய அருட்பண்புகளை ஓதி யறியேன்; அதனால் புலைத்தன்மையுற்றுக் கொடியவனாகிய யான் உரைத்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.

     துலைக்கொடி - நேர்மையொழுங்கு. “செம்மையேயாய சிவ” மாதலின் “துலைக் கொடி” என்று சொல்லுகின்றார். உயிர்கட்கும் பல்லாற்றானும் துணையே செய்வதாகலின், திருவருளைத் “துணையருள்” எனக் குறிக்கின்றார். துரிசு - குற்றம். திருவருட் டிறம் - கருணைப் பரிசு எனப்படுகிறது. புலைக்கொடியேன் - புலைத் தன்மையாற் கொடியவன். மலைக் கொடி -மலையரையன் மகளாய்க் கொடி போன்ற இடையை யுடையவள். கலைக் கொடி - பல்வகைக் கலைகளின் ஒழுங்கு; கலைகள் பலவற்றையும் நேர்மைப் படுத்தி மக்களுயிர்க்கு நன்மை புரிவிக்கும் பெரியோராதலின், “கலைக் கொடி நன்குணர் முனிவர்” என மொழிகின்றார். இச் சிறப்பு உணர்த்தவே, “உவமையிலாக் கலைஞானம்” (திருஞான) எனச் சேக்கிழார் தெரிவிக்கின்றார். கனக சபை - பொன் வேய்ந்த சபை; பொன்னம்பலம், சிவஞானமுரைக்கும் ஆசிரியன்மார்களுக் கெல்லாம் முதலாசிரியன் என்றற்குக் “காரண சற்குரு” எனக் குறிக்கின்றார்.

     இதனால், கருணைப் பரிசறியாது துரிசு கூறிய பிழை பொறுத் தருள்க என முறையிட்டவாறாம்.

     (5)