பக்கம் எண் :

3222.

    கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
        காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
    பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
        புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
    ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
        அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
    மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
        வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.

உரை:

     புதுமையான அமுதம் போன்றவனே, சுத்த சுகவடிவான ஞானப் பொருளாகிய சிவமே, பல்லவ வேந்தனான ஐயடிகள் காடவர்கோன் மனம் களிப்போடு துதிக்கின்ற பொன்னம்பலத்தின்கண் அருட் கூத்தாடும் சிவந்த பவளமலை போன்ற பெருமானே, மெய்யுணர்ந்த சான்றோராகிய அடியார்களின் மனத்தினுள்ளே ஒளிர்கின்ற விளக்காகியவனே, வேதத்தின் உச்சியில் மேவுகின்ற மேதக்க மெய்ம்மை சான்ற குருபரனே, உனது திருவருளின் ஒளியை கடையனாகிய யான், நான் சிவத்துக்கு அடைக்கலப் பொருள் என்று அறியாமல் பெருமை மிக்க, அதன் திருவருளோடு பிணங்கிக் குற்றங்கள் பல வுரைத்துள்ளேன்; பொய்க்கு அடிமையாகிய யான் உரைத்துள்ள பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகின்றேன். எ.று.

     கணந்தோறும் புதுமையுறும் பரம் பொருளாதலால், “புத்தமுதே” என்றும், துன்பக் கலப்பில்லாத பூரண வின்ப நிறைவாதல் பற்றி, “சுத்த சுக பூரண சிற் சிவமே” என்றும் போற்றுகின்றார். ஐயடிகள் காடவர் கோனைப் பரமேசுவரப் பல்லவன் என ஆராய்ச்சியாளர் கூறுவர். இவர் க்ஷேத்திர வெண்பா என்ற நூலைப் பாடிச் சிவனைத் துதித்திருக்கின்றார். அது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையிற் கோக்கப் பட்டுள்ளது. அம்பலம் - தில்லைச் சிற்றம்பலம். செம்மேனி யம்மானாதலின் “செம்பவள மலையே” என்று கூறுகின்றார். மெய்யடியர் நினைவுக் கண்ணெதிரே நின்றவண்ணமிருத்தலால் “மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே” என விளம்புகின்றார். “பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே, மெய்யே நின்றெரியும் விளக்கே யொத்த தேவர் பிரான்” (கழிப்பா) என நம்பியாரூரர் நவில்வது காண்க. வேதமுடி - வேதாந்தம். உண்மை ஞான ஆசிரியன் சிவன் என்பது விளங்க “மேதகு சற்குரு” என விளம்புகின்றார். கையடை - அடைக்கலம். அவனையின்றித் தமக்கு அசைவில்லை யென்பது உணரப்படின் தாம் அவன் கையகப் பட்டமை விளங்குமாதலால், “கையடை நன்கு அறியாது” என்று கூறுகிறார். அருளொடு பிணங்குதலாவது அருள் வழிச் செல்லாமல் அறிவு வழியிற் செல்லுதலாம். அதனாற் குற்றம் பலவுண்டாதல் கண்டு, “காசு புகன்றேன்” என வுரைக்கின்றார். கருணைத் தேசு - அருளொளி. பொய்ந் நினைவும் சொல்லும் செயலும் உடையனாதல் கண்டு கூறுதலால், “பொய்யடியேன்” எனத் தம்மை இழிக்கின்றார்.

     இதனாற் பொய் யடிமைக்கு வருந்தி அது காரணமாக விளைந்த குற்றம் பொறுத்தருள் என வேண்டியவாறாம்.

     (7)