பக்கம் எண் :

3225.

    ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
        ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
    புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
        பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
    சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
        துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
    மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
        விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.

உரை:

     வெண்ணீறணிந்து விளங்குகிற பொன்னிற மேனியை யுடைய சிவபெருமானே, சொல்லினெல்லையும் பொருளின் எல்லையையும் கடந்த பரநாதமாகிய துரிய வெளியின்கண், நிலவும் பெரிய நிலைக்குரிய மெய்ப்பொருளாகிய தலைவனே, பெண்மைப் பண்புருவாய சிவகாமவல்லியெனப்படும் உமாதேவி கண்ணாரக் கண்டு மகிழ, பலவாய் விரிந்த வேதங்கள் பராவத் திருநடம் புரியும், அருளுருவாகிய இறைவனே துன்பம் போக்கும் வழி யுணராதவனாகிய யான், உனது திருவருள் ஞான நலத்தை இயன்ற அளவு தானும் அறியாமல் அதனோடு மாறுபட்டுப் பிணங்கி ஊறாவனவற்றையே எடுத்துரைத்தேனாகலின், அற்பனாகிய என்னுடைய பிழைகளைப் பொருத்தருள வேண்டுகிறேன். எ.று.

     “வெண்ணீறு பூசி உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும்” (மழபா.) செய்வர் என நாவுக்கரசர் உரைப்பதை யுணர்ந்த அடியார் கண்டு மகிழத் தாமும் அதனை மேனி யெங்கும் அணிந்து விளங்குதலால், “பூதி யணிந்து ஒளிர்கின்ற பொன் மேனிப் பெருமான்” எனப் புகல்கின்றார். “பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்” (வீழி) எனச் சுந்தரரும் புகழ்கின்றார். பூதி - விபூதி என வழங்கும் திருநீறு. பரநாதம் - நாத தத்துவத்துக்கு மேலுள்ள நிலை; அதனை யுணருமிடம் உந்தித் தானமாகிய துரியப் பகுதிக்கு அதீதமான மூலாதாரம். அங்கு உணர்வு வடிவாய் உயிர் மாத்திரம் கருவி கரணங்களின் தொடர்பின்றி நோக்க ஆண்டுத் தோன்றுதலின், “பரநாதத் துரிய வெளிப் பொருளான பதியே” என்றும், அதனினும் பெரிய நிலை வேறின்மை பற்றிப் “பெரிய நிலைப்பதியே” என்றும் இயம்புகின்றார். கருவி கரணத் தொடர்பின்மையால் “சொல்லியலும் பொருளியலும் கடந்த” என விதந்து மொழிகின்றார். பெண்மை வடிவினளாதல் பற்றி, சிவகாமவல்லியை “மெல்லியல்” எனச் சிறப்பிக்கின்றார். வேத பாராயணம் செய்வோரை வேதம் என்பது பற்றி, “மறை யேத்த” என்று கூறுகிறார். துன்ப நீக்கமும் இன்ப வாக்கமும் ஆகிய இரண்டுமே உயிர்களின் நாட்டமாகும்; இரண்டன் முயற்சிகளில் துன்ப நீக்கம் முற்பட நிற்றலின், “துயரம் ஆறும் வகையுணரேன்” எனச் சொல்லுகின்றார். அதற்குத் துணையாவது திருவருள் ஞான மென்பதை இயன்ற அளவு உணர்ந்து பெற முயலாதொழிந்தமை புலப்பட, “ஒல்லும் வகை யறியாதே” என்றுரைக்கின்றார். அறியாது ஒழிந்ததே திருவருளோடு பிணங்கி மாறுபட்டு என் முயற்சிக்குத் தீங்கு செய்வனவற்றைச் சொல்லிக் குற்றப்பட்டேன் என்பாராய், “உன்னருளோடு ஊடி ஊறு புகன்றேன்” என மொழிகின்றார். இவ்வாற்றால் அற்பனாயினமை காட்டித் தமது பிழை பொறுத்தருள வேண்டலுற்று, “புல்லியனேன்” புகன்ற பிழை பொறுத்தருள வேண்டும்” என முறையிடுகின்றார்.

     இதனால், புன்மையாற் செய்த பிழையைப் பொறுக்க வேண்டியவாறம்.

     (10)