பக்கம் எண் :

9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை

    அஃதாவது, இறைவன் திருவருளை ஆளும் நலமுடைய திருஞானசம்பந்தரை, நினைந்து அவரது அருள் பெற விழைந்து பாடும் பாமாலை, பிள்ளைப பருவத்தே சிவனது திருவருள் ஞானப் பால் பெற்றுண்டு, பாடல் வல்ல புலமை சிறந்தவராதலால் பிள்ளை எனப்படுகின்றார். தாம் பெற்ற திருவருளைத் தமது வாழ்வில் பல நல்ல அற்புதங்களால் எடுத்தாண்டமை ஆளுடைய பிள்ளை எனச் சான்றோர் புகழும் தகைமை கொண்டார். இக் கருத்தையே ஏனைத் திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மூவர்க்கும் கூறிக் கொள்க. இதன்கண், உயிரனுபவம், அருளனுபவம், சிவானுபவம் என்ற மூவகை யனுபவங்கள் தொகுத்தும் வகுத்தும் கூறப்படுகின்றன. ஞானசம்பந்தரைப் பரவும் இப்பாமாலையில் பிள்ளையாரின் திருவருள் நலமும், அவர் அருளிய திருநெறித் தமிழின் நலமும் எடுத்தோதி, தமக்கு இளமைப் பருவத்தேயே ஈடுபாடு உண்டாக்கிய வரலாற்றுக் குறிப்பை வடலூர் வள்ளல் உரைக்கின்றார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3226.

    உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும்
        உற்றிலாச் சிறியஓர் பருவத்
    திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்
        ஏற்றவுந் தரமிலா மையினான்
    விலகுறுங் காலத் தடிக்கடி ஏற
        விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
    திலகநற் காழி ஞானசம் பந்தத்
        தெள்ளமு தாஞ்சிவ குருவே.

உரை:

     மேன்மையை யுடைய நல்வளம் படைத்த சீர்காழிப் பதிக்குரிய திருஞான சம்பந்த ரென்னும் தெளிந்த அமுதமாகிய சிவகுருபரனே, உலகியலறிவு அணுவளவும் பெறாத சிறு பருவத்தில் இருந்த எனக்கு, உள்ளிருந் தருளித் திருவருணெறியில் யான் முற்பட் டொழுகவும், போதிய தகுதி யின்மையால் அந்நெறியினின்றும் பிறழும் போது அடிக்கடி என்னை அந்நெறிக்கண் நிறுத்தியும் பின்னர் யான் பிறழா வண்ணம் நிலைபெறுவித்தும் அருளினாய்; நின் பேரருளை என்னென்பேன். எ.று.

     திலகம், மகளிர் நுதற் கழகு செய்யும் பொருட் குரியதாயினும் மேன்மை யென்னும் பொருளினும் நூல்களில் வழங்குவது. “திலகமுக்குடைச் செல்வன் திருநகர்” (சீவக. 3001) என வருதல் காண்க. சீர்காழிக்கு நன்மை வளமுடைமை ஞானசம்பந்தராலாகிய சிறப்புப் பற்றி அவரைத் “தெள்ளமு” தென்றும், அவர் உரைத்தருளிய ஞான நலத்தை வியந்து “சிவகுரு” என்றும் சிறப்பிக்கின்றார். எண்ணுவன செயற்படுத்தும் திறம் எய்துங்காலம் உலகிய லுணர்வு எய்துங் காலமாதலால், அதனை “ஓர் அணுத்துணையும் உலகிய லுணர்வு உற்றிலாச் சிறுபருவம்” என விளக்குகின்றார். இளமைக் காலத்திலேயே அருணெறியில் தமக்குப் பற்றும் ஈடுபாடும் உண்டானதற்குக் காரணம் திருவருள் என்பாராய் “எனக்குள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும்” எனவும், ஓரொருகால் தாம் அந்நெறியில் தவறினமை புலப்பட, “தரமிலாமையினால் விலகுறுங் காலத்து” எனவும், அக்காலத்தே தம்மைக் கைவிடாமல் நெறிக்கண் நிறுத்தித் திருவருள் துணை செய்தமையை நினைந்து “விலகுறுங் காலத்து அடிக்கடி ஏற விடுத்” தெனவும் விளம்புகின்றார். தவறும் போதெல்லாம் “இடரினும் தளரினும் என துறுநோய் தொடரினும் உன் கழல் தொழு தெழுவேன்” (ஆவடு) என வரும் திருப்பதியம் நெஞ்சின்கண் நின்று ஊக்கினமை இனிது புலப்பட, “பின் விலகுறாதளித்தாய்” எனவும் எடுத்தோதுகின்றார். “அடிக்கடி ஏற விடுத்து” என்றது. அருணெறியிற் பன்முறை தவறினமையும், பின்பு அதனைப் பற்றினமையும் உணர்த்துகின்றது.

     இதனால், ஞானசம்பந்தரின் அருட் பாட்டுணர அருணெறிக்கண் தம்மை இளமைப் பருவத்தேயே இருத்தி யாண்டமை தெரிவித்தவாறாம்.

     (1)