பக்கம் எண் :

3227.

    உயிர்அனு பவம்உற்றிடில் அதனிடத்தே
        ஓங்கருள் அனுபவம்உறும்அச்
    செயிரில்நல் அனுப வத்திலே சுத்த
        சிவஅனு பவம்உறும் என்றாய்
    பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப்
        பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
    பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான
        பந்தன்என் றோங்குசற் குருவே.

உரை:

     நன்மொழி பயிலும் மூன்றாமாண்டில் உமையம்மை தந்த ஞானப்பாலை இன்பமாக வுண்டு, சைவ மெய்ம்மை நெறியாகிய பயிர் வளம் பெறத் திருவுளம் வைத்தருளிய ஞானசம்பந்தன் என்று புகழ் பெருகிய உண்மைக் குருபரனே, உயிரனுபவம் உண்டாயின் அவ்வுணர்வின்கண் உயர்ந்த அருளனுபவம் உண்டாகும்; குற்றமில்லாத அந்த நல்லனுபவத்தால் சுத்த சிவானுபவம் உண்டாகும் என உரைத்தருளினாய். எ.று.

     நடை பயின்று தூய மொழி பயிலும் பருவமாதல் விளங்கப் “பயிலும் மூவாண்டு” என உரைக்கின்றார். சிவை - உமாதேவி. சிவனுக்குப் பெண்பாற் பெயர் சிவை என்பது. உமை தந்தது ஞானம் குழைத்த பால் எனச் சேக்கிழார் முதலியோர் கூறுதலால், “சிவை தரு ஞானப்பால்” என்றும், கொடுத்த பாலை மறாது உண்டமையின், “மகிழ்ந் துண்டு” என்றும் எடுத்துக் கூறுகின்றார். “இலகு மெந்நெறி சிவநெறி” (ஞான. பு.) எனச் சேக்கிழார் பெருமான் செப்புதலின், “மெய்ந்நெறி” எனவும், சைவ நெறி ஞானசம்பந்தரால் வேற்றுச் சமயமாகிய களை நீக்கப்பட்டமை புலப்பட, “மெய்ந் நெறியாம் பயிர் தழைத்துற” எனவும் இயம்புகிறார். சமய ஞானக் குரவராதலால், “ஞானபந்த னென்றோங்கு சற்குருவே” என்று சாற்றுகின்றார். ஞானசம்பந்தன் என்பது ஞானபந்தன் என வந்துளது. பந்தனென்றே தம்மை ஞானசம்பந்தர் கூறுவ துண்மையின், வடலூர் வள்ளல் “ஞானபந்தன்” என நவில்கின்றார். உயிர்கள் படும் துன்பங்களைக் கண்டறிதல் உயிரனுபவம்; அதனைப் பிற மக்களுயிர்களிடத்துக் கண்டு மன மிரங்குதல், அருளனுபவமாதலின் “அதனிடத்தே ஓங்கு அருளனுபவம்” எனவும், உயிரனுபவத்தினடியாக மிக்குறுதலால் “ஓங்கருள் அனுபவம்” எனவும் இசைக்கின்றார். அருளனுபவம் அருள் ஞானமாய்க் குற்றமில்லாத செம்மை நெறிக்கண் உயிரறிவைச் செலுத்துதலின், “செயிரில் நல்லனுபவம்” என்று சிறப்பிக்கின்றார். இந்த அனுபவம் உலகுயிர்கள் அனைத்தின் பாலும் பரந்து படர்ந்து மேம்படுதலால், “நல்லனுபவத்திலே சுத்த சிவானுபவம் உறும்” என்று கூறுகின்றார்.

     இதனால், உயிரனுபவம், அருளனுபவம், சிவானுபவம் மூன்றும் தொகுத்துக் கூறியவாறாம்.

     (2)