பக்கம் எண் :

3233.

    செவ்வகை ஒருகால் படுமதி அளவே
        செறிபொறி மனம்அதன் முடிவில்
    எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள்
        எண்ணிய படிஎலாம் எய்தும்
    இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன்
        றெனக்கருள் புரிந்தசற் குருவே
    தெய்வகை அமண இருளற எழுந்த
        தீபமே சம்பந்தத் தேவே.

உரை:

     பகைமை பூண்ட அமண இருள் நீக்க, எழுந்த ஞானதீபமே திருஞானசம்பந்தராகிய தெய்வமே, சற்குருவே, ஓரொருகால் செம்மை நெறிக்கண் செல்லும் இயற்கையறிவளவு, செறிகின்ற ஐம்பொறியளவாம்; அதன் முடிவில் மனம் நின்று எவ்வகை நிலைகளையும் தோற்றுவிக்கும்; நினக்குள் நீ நினைக்கின்றவை யெல்லாம் தெளிவுறும்; இந்த நெறியொன்னும் வருத்தம் பயவாத நெறியாம் என எனக்கு அறிவுறுத்தருளினாய். எ.று.

     அறிவின்கண் தோன்றும் கருத்துக்கள் அனைத்தும், பொய் படாது ஓரொரு சமயத்தில் செம்மையாகவும் தெளிவாகவும் உண்மையாகவும் அமைவதுண்டாதலின், “செவ்வகை யொருகாற் படும் மதி” எனக் கூறுகின்றார். மதி - இயற்கையறிவு. இயற்கை யறிவு பொறி புலன் களால் எய்தும் உணர்வு வளத்தைச் சார்ந்தவையாதலால், “மதியளவு செறி பொறி” எனச் சொல்லுகின்றார். பொறி - கண் முதலிய ஐந்து; பொறியைந்தாலும் உளதாகும் இயற்கையறிவு மதியெனப்படுகிறது. “மதிநுட்பம் நூலோடுடையார்” (குறள்) என்பது காண்க. அறிவு வளர்ச்சிக்கு, பொறியுணர்வு அடிப்படையாதலால் அதனை முன்னோர் வாயிற் காட்சி யெனவும் வழங்குவர். ஐம்பெரும் பூதங்களாலாகிய உலகனைத்தையும் தம்முட் செறியக் கொள்ளுதலால், கண் முதலிய பொறிகளைச் “செறி பொறி” எனச் சிறப்பிக்கின்றார். பொறிகள் கொண்டுய்க்கும் உணர்வுகளைத் தொகுத்தும் வகுத்தும் தன்னுட்கொள்வது மனமாதல் தோன்ற “மனம் அதன் முடிவில் எவ்வகை நிலையும் தோற்றும்” எனவுரைக்கின்றார். பொறியுணர்வின் முடிவில் மனம் நின்று காண்பது மானதக் காட்சி என வழங்குகிறது. மனக்கண்ணில் உருவும் அருவுமாகிய யாவும் காட்சிப் படுதலால் “நினக்குள் நீ எண்ணியபடி யெலாம் எய்தும்” என்று இயம்புகின்றார். வாயிற் காட்சி மானதக் காட்சி என இயலும் இவ்வகையால் அறிவுக்காட்சியாகிய நன்ஞானம் உருவாதலால், “இவ்வகை யொன்றே வருத்தமில் வகை” என மொழிகின்றார். வருத்த முடைய வகையு முண்டாதல் பற்றி “வருத்தமில் வகை” என விதந்துரைக்கின்றார். வருத்தமுடையன யோகக் காட்சியும் தன் வேதனைக் காட்சியும் பிறவுமாம் என அறிக. அளித்த குருவேயெனப் பெயரெச்சத் தொடராற் கூறினாராயினும் பொருள் விளக்கம் பற்றி அளித்தாய் குருவே” என முற்றுத் தொடராக்கப்பட்டது. தெவ் - பகை.

     இதனால், அறிவுக் காட்சியான ஞானக் காட்சி விளக்கியவாறாம்.

     (8)