3235. வருபகற் கற்பம் பலமுயன் றாலும்
வரலருந் திறனெலாம் எனக்கே
ஒருபகற்பொழுதில் உறஅளித் தனைநின்
உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
பெருமண நல்லூர்த் திருமணங் காணப்
பெற்றவர் தமையெலாம் ஞான
உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த
உயர்தனிக் கவுணிய மணியே.
உரை: நல்லூர்ப் பெருமணம் என்னுமிடத்தே நடந்த தமது திருமணம் காணவந்திருந்த நன்மக்கள் அனைவரும் சிவானந்த ஞானத் திருவுருப் பெற்றுச் சிவன் திருவடி நீழலையடைந்திடத் திருவருள் புரிந்த உயர்வுடைய ஒப்பற்ற கவுணியர் குலத்திற்குச் சிகாமணியாகிய திருஞானசம்பந்தப் பெருமானே, மேன்மேல் வருகின்ற ஆண்டுகள் பல முயன்றாலும் எய்துதற் கரிய நலமனைத்தும் ஒருநாளைப் பொழுதில் எனக்கு எய்த அருளினாயாதலின், அதற் கேதுவாகிய நின்னுடைய கருணையை என்னென்று புகழ்வேன். எ.று.
பெருமண நல்லூர், நல்லூர்த் திருமணம் என அந்நாளில் வழங்கிற்று; இந்நாளில் அது சோழ நாட்டுக் கொள்ளிடத் தென்கரை மேல் சீர்காழி வட்டத்து ஆச்சாள்புரம் என வழங்குகிறது. திருமணம் காண வந்தோர் அனைவர்க்கும் வீடுபேறெய்திய திறத்தை, “ஆறுவகைச் சமயத்திலிருந்தவரும் அடியவரும் கூறுமறை முனிவர்களும் கும்பிட வந்தணைந்தாரும் வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும், ஈறில் பெருஞ் சோதியினுள் எல்லாரும்” (ஞான. பு) புக்கனர் என்று சேக்கிழார் பெருமான் பாடுவது காண்க. சிவன் திருவடி நீழல் எய்துவோர் பூத வுடலின் நீங்கிச் சிவஞானத் திருவுருப் பெற்று அடைவர் எனப் பெரியோர் உரைத்தலால், “ஞான வுருவடைந் தோங்க” என நவில்கின்றார். கற்பம் - ஆண்டு பல கொண்ட காலவளவு. மிகப் பல ஆண்டுகள் முயன்று பெறும் நலத்தை ஒரு சிறு பொழுதில் தாம் பெற்றமை கூறுவாராய், வடலூர் வள்ளல், “வருபகற் கற்பம் பல முயன்றாலும் வரலரும் திறனெலாம் எனக்கே ஒருபகற் பொழுதில் உறவளித்தனை” என்று உரைக்கின்றார். அஃது இன்னதெனத் தெரியவில்லை.
இதனால், திருஞானசம்பந்தரின் திருவருட் சிறப்பை எடுத்தோதியவாறாம். (10)
|