3236. சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
தெவிட்டா துளத்சில் தித்திக்கும் தேனே அழியாச் சல்வமே
காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ யிருக் கொருதுணையே
பேரார் ஞான சம்பந்தப் பெருமானேநின் திருப்புகழைப்
பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.
உரை: சிறப்புப் பொருந்திய சீர்காழி வேதிய ரினத்துக் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞான விளக்கமே, நினைப்பவர் மனத்தின்கண் தெவிட்டாமல் இனிக்கின்ற தேன் போன்றவனே, தேய்வில்லாத செல்வமாகியவனே, கரிய கழுத்தையுடைய பவளமலை போன்ற சிவன்பால் தோன்றி வளர்கின்ற கற்பகமே, கரும்பே, கனி போல்பவனே, என்னுடைய கண்ணையும், கண்களில் ஒளிரும் கருமணியையும் ஒப்பவனே, அழகிய மூன்றாமாண்டில், உமாதேவி யெடுத்து, இனிய முலைப்பாலை யுண்பிக்கும் இன்பந் தரும் குதலைச் சொற்களைப் பேசும் இளங்குருத்துப் போல்பவனே, எனது அரிய உயிர்க்குத் துணையாகியவனே. பெயராற் சிறந்த ஞானசம்பந்தப் பெருமானே, நின்னுடைய திருமிக்க புகழை நாளும் ஓதுபவர் பெருஞ் செல்வ மெய்தி மேன்மை யுறுவர். எ.று.
சண்பை - சீர்காழிக்குரிய பெயர் பன்னிரண்டனுள் ஒன்று; “பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்கு பெருநீர்த் தோணி, புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவம் சண்பை, அரன் மன்னு தண்காழி கொச்சை வய முள்ளிட்டங்காதியாய, பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமல நாம் பரவு மூரே” எனத் திருஞானசம்பந்தர் கூறுவது காண்க. பூசுரர் குடியாதலால் “தெய்வ மரபு” எனச் சிறப்பிக்கின்றார். உலகில் வழங்கும் தேனை விலக்குதற்குத் “தெவிட்டாது உள்ளத்தில் தித்திக்கும் தேன்” என்கிறார். கரிய கழுத்தும் பவள நிறமும் உடையராதலின் பரமசிவனை, “காரார் மிடற்றுப் பவளமலை” எனவும், சிவன்பால் தோன்றிய முருகனுடைய அமிசமாக ஞானசம்பந்தர் கருதப்படும் குறிப்புப் புலப்பட, “பவள மலைக்கண் முளைத்த கற்பகமே” எனவும் இயம்புகிறார். இன்சாரியைத் தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண் வந்தது. கற்பகம் - தேவருலகத்துத் தாவரம். ஏர் - அழகு. வளர் பருவமாதலால், “ஏரார் பருவம்” என வுரைக்கின்றார். “முலைப்பால்” என்பதனால் எடுத் தூட்டல் கூறுகின்றார். மூன்றாம் வயதில் பேசும் மொழி நிரம்பாமை பற்றி, “குதலை மொழிக் குருந்தே” எனக் குறிக்கின்றார். முதிர்ந்தோர்பால் தோன்றின் இகழ்ச்சி பயப்பதாயினும், இளையோர்பால் இன்பம் பயக்கும் நிலைமைத் தாதலால், “இன்பக் குதலை மொழி” என இயம்புகிறார். குருத்து - குருந்து என வந்தது. ஞானசம்பந்தப் பேர் புதுமையும் பொருணிறைவும் உடையதாதல் கண்டு, “பேரார் ஞானசம்பந்தப் பெருமானே” என்று உரைக்கின்றார். ஞானசம்பந்தம் திருவருள் தொடர்பு காட்டி அருட் செல்வத்தால் உயர்விப்பது புலப்பட, “பெருஞ் செல்வத்திற் பிறங்குவர்” என விளம்புகின்றார்.
இதனால் ஆராக் காதலன்புற்று, ஞானசம்பந்தப் பெருமானைப் பராவியவாறாம். (11)
|