3238. வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
சேய்மைவிடா தணிமையிடத் தாள வந்த
செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.
உரை: வாய்மை யொழுக்கமில்லாத சமணர்களாகிய ஏழை மக்கள் செய்த வஞ்சச் செயல்களாகிய கடலைத் திருவருள் என்னும் பெரிய புணையின் வலிமையால் கடந்து, தூய்மை நல்கும் சிவநெறியே நாட்டில் விளங்க உயர்ந்த ஒளியையுடைய மணி போல்பவரே, எனக்குத் துணையாகியவரே, எங்களைத் தூரத்தே விலகிச் செல்ல விடாமல் அருகில் வைத்து அருள் புரிய வந்த செல்வமாகியவரே, எல்லை யில்லாத சிறப்புற்று உள்ளத்தின்கண் மெய்ம்மை ஆராய்ச்சியைச் செய்தொழுகும் பெருந்தகைமையுடையவரே, ஞான அமுதமானவரே, சைவத்துக்கு அணியானவரே, நாவுக்கரசர் என்னும் திருப்பெயர் கொண்ட தேவரே, எளியேன் வணங்குகின்றேன். எ.று.
நாவரசர் முதலிய பெருமக்கள் காலத்தில், சமண சமயம் அரசாதரவு பெற்றுப் பொய்யும் வழுவும் புகுந்து மெலிந்தமையின், மெலிவுக் கிடந்தவர்களை, “வாய்மையிலாச் சமணாதர்” என்று கூறுகின்றார். நாவுக்கரசரால் தங்கள் சமயம் சிறப்பிழக்கு மென்றஞ்சி நீற்றறையிற்றள்ளியும், நஞ்சமு தருத்தியும், கடலிற்றள்ளியும் துன்புறுத்தினமையின். “வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தி” என மொழிகின்றார். நீந்தி என்றதனால் வஞ்சமாகிய கடல் எனப் பெய்துரைக்கப்பட்டது, நஞ்சு கொடுத்ததை வஞ்சனைப்பாற் சோறாக்கி, “வழக்கிலா அமணர் தந்த நஞ்சமுதாக்குவித்தார் நனிபள்ளியடிகளாரே” என்றும், கல்லிற் பிணித்துக் கடலிற்றள்ளியதைக் “கல்லினோடெனைப் பூட்டிய மண்கையர், ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால், நெல்லு நீள்வயல் நீலக் குடியரன், நல்ல நாமம் நவிற்றியுய்ந்தேனே” (நீலக்) என்றும் நாவுக்கரசரே கூறுகின்றார். திருவருட் பேர் வலம் எனக் கொண்டு திருவருளின் பெயராகிய “சிவ” என்பதன் வலிமையால் பொருள் கூறலும் உண்டு. மக்களுயிரோடே நிற்கும் சமயங்களின் வேறுபட்டு உயிர் வகையனைத்தையும் தழுவி நிற்கும் தூய்மையும் பெருமையும் உடையதாதலால், “தூய்மை பெறும் சிவநெறி” எனச்சொல்லுகின்றார். நாவரசரின் அருளிச் செயல்களால் சிவநெறிக்கு ஏற்ற முண்டானமை தோன்றற்குச் “சிவநெறி விளங்க வோங்கும் சோதி மணி விளக்கே” எனச் சிறப்பிக்கின்றார். விளங்கா மொழியாலும் இனிது தெளியப் படாத உரைகளாலும் மக்களை நெடிது நீங்க விடாமல், தமிழ் நாட்டவர் தெரிந்த மொழியாலும், எளிய இனிய உரைகளாலும் மக்களைத் தழுவிக் கொண்டமை பற்றி, “சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே” எனவுரைக்கின்றார் ஆய்தல் - ஆய்மை என வந்தது. பொருள்களைக் காரண காரிய முறையில் ஆய்ந்து வகுத்து முறையாக இனிய இசை நலம் பொருந்தப் பாடியுள்ள தாண்டகங்கள் நாவரசரின் ஆய்வுப் பண்பை எடுத்துக் காட்டுதலின், ஆய்மையுறு பெருந்தகையே” எனக் கூறுகின்றார்.
இதனால், நாவுக்கரசரின் நாநலம் பாராட்டியவாறாம். (2)
|