பக்கம் எண் :

3239.

    தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
        திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
    நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான
        நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
    பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்
        பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
    மேவவிருப் புறும் அடியர்க் கன்பு செய்ய
        வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே.

உரை:

     தேவர்கள் அனைவரும் தொழுது துதிக்கும் தேவதேவனான சிவபெருமானுடைய, திருவடியாகிய தாமரை மலரைத் தலைமேற் கொண்டு விளக்கம் பெறுகின்ற நாவுக்கரசரே, பிரமதேவனும் விழைகின்ற ஞான நாயகரே, நல்லவர்களாகிய பெருமக்கட்கு நண்பராகியவரே, யாங்கள் செய்துள்ள பாவமெல்லாம் போக்கி, அருள் ஞானம் பெறும் தன்மையைத் தருகின்ற பண்பையுடைய பெருமானாரே, நின்னைப் பணிந்து, நின்னை அடைய வேண்டுகின்றேனாகலின், யான் அதற்குரிய திறம் பெற அருள வேண்டும். எ.று.

     தேவதேவனாதலால், “தேவரெலாம் தொழும் தலைமைத் தேவர்” எனச்சொல்லுகின்றார். “தொழப்படுந் தேவர் தொழப்படுவான்” (தனி) எனத் திருநாவுக்கரசர் தெரிவிக்கின்றமை காண்க. சிவன் திருவடி தமது சென்னியிலிருப்பதாக எண்ணி மகிழ்பவராதலால், “தேவர் பாதத் திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற நாவரசே” என்று நவில்கின்றார். வேத வைதிக ஞான மூர்த்தியாதலால் சிறப்பும்மை பெய்து “நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே” எனப் புகழ்கின்றார். மன மொழி மெய்களால் தூயவர் நல்லவராவர்; அவரெல்லாம் பாராட்டும் நலமுடைமை கண்டு “நல்லவர்க்கு நண்பனே” என்று போற்றுகின்றார். உயர்ந்தோர் தம்மையடைந்த தாழ்ந்தோருடைய பாவங்களை மன்னித்துப் போக்கி நல்லவராக்குதல் விளங்க, “எம் பாவமெலாம் அகற்றி அருட்பான்மை நல்கும் பண்புடைய பெருமானே” என்று பகர்கின்றார். “வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினாற் பொறுப்பவனே” (அடைக்) எனத் திருவாசகம் ஓதுவதறிக. நின்பால் அன்பு செய்வார்பால் தமக்கு அன்புண்டாக வேண்டும் என வேண்டுகின்றாராதலின், “நின்பால் மேவ விருப்புறும் அடியர்க் கன்பு செய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாய்” எனப் பணிந்து பரவுகின்றார். பிறர்பால் அன்பு செய்வாரிடத்து நமக்கு அன்புண்டாதல் அரிதாகலின், இவ் வேண்டுகோட்கு வடலூர் வள்ளல் உள்ளத்து இடமுண்டாயிற்றென அறிக. விதித்தல், செய்கை மேற்று.

     இதனால், நின்பால் அன்புடையார்க்கண் எனக்கு அன்புண்டாக அருளுக என வேண்டியவாறாம்.

     (3)