324. முலையொருபால் முகமொருபால் காட்டும் பொல்லா
மூடமட வார்கடமை முயங்கி நின்றேன்
இலையொருபா லனமொருபால் மலஞ்சேர்த் துண்ணும்
ஏழைமதி யேன்தணிகை யேந்த லேபொன்
மலையொருபால் வாங்கியசெவ் வண்ண மேனி
வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தா ளேத்தேன்
புலையுருவா வஞ்சகநெஞ் சுடையே னென்றன்
புன்மைதனை யெவர்க்கெடுத்துப் புகலு வேனே.
உரை: தணிகைப் பதியில் எழுந்தருளும் தலைவனே, பொன் மலையாகிய மேருவை வில்லாக வளைத்த செம்மேனி வள்ளலாகிய சிவபெருமான் அளித்த மருந்து போன்ற மகனே, முலையையும் முகத்தையும் மாறி மாறிக் காட்டி மயக்கும் மூடத் தன்மையுடைய இளமகளிரைக் கூடுதலிலே நிலைத்த யான், உண்ணும் இலையில் ஒருபக்கம் சோறும் ஒரு பக்கம் மலமும் வைத்துண்ணும் சிற்றறிவு கொண்டவனாதலால் நின்னுடைய தாமரை மலர் போலும் திருவடிகளை வழிபடா தொழிந்தேன்; அன்றியும் புலைத் தன்மையின் உருவாக வஞ்ச நினைவு நிறைந்த நெஞ்சினையும் பெற்றுள்ளேனாதலால், என் குற்றங்களை எவர்க் கெடுத்துரைப்பேன்? எ. று.
பொருளாசை கொண்ட இளமகளிர் செல்வ ஆடவர் காண மேலாடையை நீக்கிக் கொங்கையையும், கோலம் செய்த முகத்தையும் காட்டிக் காம வேட்கை எழுப்புவ தியல்பாதலால், அச்செயலையும் அதற்கேதுவாகிய மூடமதியையும் உணர்த்துகின்றா ராதலால், “முலையொரு பால் முகமொருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்” என்று இசைக்கின்றார். அருணகிரியாரும் இம் மகளிரியல்பை, “முலையை மறைத்துத் திறப்பராடையை, நெகிழவுடுத்துப் படுப்பர் வாயிதழ் முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமலர் அணைமீதே, அலைகுலையக் கொட்டணைப்பர் ஆடவர் மனவலியைத் தட்டழிப்பர் மால் பெரிது” (திருப்புகழ். 1203) என எடுத்துரைப்பர். ஒருபாற் குலமகளிரையும் ஒருபால் விலைமகளிரையும் கூடி நுகரும் பரத்தர் போலும் சிறுமை யுடையேன் என்பாராய், “ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்துண்ணும் ஏழை மதியேன்” எனக் கூறுகின்றார். ஏந்தல் - தலைவன்; உயர்ந்தவன் என்றலு முண்டு. மேருமலை பொன்னிற முடையதாகலின், பொன்மலை என்பர். வாங்குதல் - வளைத்தல். சிவன் சிவந்த மேனியனாதல் பற்றிச் “செவ்வண்ண மேனி வள்ளல்” என்று சிறப்பிக்கின்றார். “சிவனெனும் நாமம் தனக்கே யுடைய செம்மேனியம்மான்” (தனி) என நாவுக்கரசர் புகல்வது காண்க. புலைத் தன்மை யுருவாகவும், வஞ்சகம் அவ்வுருவின் உள்ளீடாகவும் உள்ளமை தோன்றப் “புலை யுருவா வஞ்சக நெஞ்சு” என விளக்குகின்றார்.
இதனால் பொருட் பெண்டிரினத்து இளமகளிரொடு கூடி யாடிய காமக்களிப்பால் முருகன் திருவடியை நினைந்தேத்தாத குற்றத்தை எடுத்துரைத்தவாறாம். (8)
|