3240. விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா
வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்
மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான
வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்
பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்
பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே
கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்
கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே.
உரை: வள்ளலே, நல்ல தலைவனாகிய சிவபெருமான் திருவடி நீழலைப் பெற்ற தவப் பெருமக்களனைவர்க்கும் தலைவனே, நாவுக்கரசர் என்ற பெயரைப் பெற்ற தெய்வமே, உயர் கதியை நல்கும் கற்பகமே, முக்கனியே, ஞானமாகிய கடலே, என் மனத்திலும் கண்ணிலும் இருப்பவனே, விதியிது வென்றும் விலக்கு இது வென்றும் பகுத்தறியும் நல்லறிவு சிறிதும் இல்லாத தீவினையுடையவனெனினும் என்னை விரும்பி எனக்குள் நல்லறிவாகிய விளக்கை யேற்றித் திருவருளாகிய வீட்டின் கண் இருந்து செய்யும் சிவஞான வாழ்வை நான் செலுத்த எனக்கு அருளவேண்டுகிறேன். எ.று.
இது செய்க என்பது விதி; செய்யற்க என்பது விலக்கு. விலக்கியவற்றை விலக்கி விதித்தன செய்தலால் விளையும் நற்பனையடைதல் நல்லறிவு; அவ்வறிவு தமக்கு இல்லை
யென்பாராய், “விதி விலக்கீதென்றறியும் விளைவொன்றில்லா வினையினேன்” என விளம்புகின்றார். பயனறிந்துணரும் நல்லறிவு “விளைவு” எனப்படுகிறது. காரணம் காரியமாக உபசரிக்கப்படுகிறது. விளை வறியாமைக்கு ஏது வினையுடைமையாதல் பற்றி “வினையினேன்” எனக் கூறுகிறார். “வினையால் அசத்து விளையும்” என்பது சிவஞான போதம். வினையால் அறிவு மாசூர்ந்து மழுங்கிக் கிடக்கிற தென்பாராய், “என்னை விரும்பி என்னுள் மதி விளக்கேற்றி” என்றும், திருவருள் எனப்படும் வீட்டின்கண்ணிருந்து சிவஞான வாழ்வு நடத்துமாறு எனக்கு உதவுக என வேண்டலுற்று, “அருள் மனையில் ஞான வாழ்வடையச் செயல் வேண்டும்” என்றும் விண்ணப்பிக்கின்றார். “ஞானத்தை விளக்கையேற்றி நாடியுள் விரவ வல்லார் ஊனத்தை யொழிப்பர்போலும் ஒற்றியூருடைய கோவே” (ஒற்றி) என நாவுக்கரசர் கூறுவது காண்க. வேண்டும் வாழ்வருளும் வண்மையை ரென்றற்கு “வள்ளலே” என வுரைக்கின்றார். நற்பதி - நல்ல தலைவராகிய சிவபெருமான். தவமுடையார்க் கல்லது சிவப் பேறு எய்தாமை தோன்றத் “தவத்தோர்” எனச்சாற்றுகின்றார். “திருத்தொண்டின் உறைப்பாலே” வெற்றி பெற்றவராதலின், “தவத்தோர்க் கெல்லாம் பதியே” எனப் பாராட்டுகின்றார். கதி - உயர் பிறப்பு. ஞான மூர்த்தி என்பது பற்றி “ஞானக் கடலே” என்று நவில்கின்றார். கருத்து, ஈண்டு மனத்தின் மேனின்றது.
இதனால் ஞான வாழ்வு பெற விரும்பினமை தெரிவித்தவாறாம். (4)
|