பக்கம் எண் :

325.

    வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
        வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
    தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
        தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
    ஆய்ப்பாலை யொருமருங்கான் ஈன்ற செல்வத்
        தாரமுதே நின்னருளை அடையேன் கண்டாய்
    ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
        என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.

உரை:

     அழகிய இளமை மாறாத உமாதேவியை ஒருபாகமாகவுடைய சிவபெருமான் பெற்ற ஞானச் செல்வமாகிய ஆரமுதமே, மூங்கில் போன்ற மெல்லிய தோளையுடைய மகளிர் ஆடையால் மறைத்தொழுகும் பெண்மை உறுப்பாகிய புழுமலிந்த பிளவின் கண் இச்சை வைத்தொழுகும் யான் தாய்ப்பாலை உண்ணாமல் நாய்ப்பாலை உண்ணும் தன்மை யுடையவானாவேன்; அதனால் திருத்தணிகையில் உன் திருமுன் சென்று வணங்கி நின் திருவருளைப் பெறேனாய்ப் பாலை நிலத்து நடப்பட்ட கருங்கல் போல் நின்று மெலிந்தேன்; இத்தகைய எனது குறைகளை உலகில் யார்க்கு எடுத்தோதுவேன்? எ.று.

     வேய் - மூங்கில். மகளிரின் மெல்லிய தோள்களுக்கு மூங்கிலை உவமை கூறுவது மரபு, “வேயன தோள்உமை பங்கன்” (வெண்கா) என்று பெரியோர் வழங்குவது காண்க. இடைச் சேலையால் நன்கு மறைக்கப் படுவது பற்றிப் பெண்மை உறுப்பை, “மடவார் மறைக்கும்” என்றும், அதன் இழிவு தோன்ற, “மாய வெம்புழுச்சேர் வெடிப்பு” என்றும் உரைக்கின்றார். உலகுயிர்க் கெல்லாம் தாயாய்த் தலையளிக்கும் திருவருளை விரும்பாது கீழ்மை மகளிரின் நுகர்ச்சியை நயந்தொழுகுவது தகவுடைமை யாகாதாதலால், அதனைத் “தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பாலை உண்ணும் தகையனேன்” என்று மனம் நொந்து உரைக்கின்றார். ஆய்ப்பாலை - அழகிய உமாதேவி. ஆய் - அழகு. பாலை - இளம் பருவ மங்கை. இளமையும் அழகும் என்றும் குன்றாதவ ளாதலால் உமையம்மைக்குப் 'பாலை' என்பது ஒரு பெயராகும். அவளை இடப்பாகத்தே உடையவனாதல் பற்றிச் சிவனை, “ஆய்ப்பாலை ஒருமருங்கான்” என்று கூறுகின்றார். செல்வத்தாரமுது என்றவிடத்துச் செல்வம் உயர்வு குறித்து நின்றது. பாலை நிலத்து நடப்படுகின்ற கல், ஏனை முல்லை, மருத நிலங்களில் நடப்படும் கற்கள் போலப் பயன்படாமையின், தமது பயனில்லாமை விளங்க, “ஏய்ப்பாலை நடுங்கருங்கல்” என உரைக்கின்றார். மக்கள் செல்லும் வழிகளில் தலைச் சுமையை இறக்கி இளைப்பாறும் பொருட்டுக் கற்கள் நடப்படுவது முன்னாளைய வழக்கமாதலின் அதனை ஈண்டு, “நடுங் கருங்கல்” என நினைப்பிக்கின்றார். இக்கற்கள் வழியேகும் விலங்குகள் உடலைந் தேய்த்துக் கொள்ளுதற்கும் பயன்படும். பண்டையோர் இக்கற்களில் அறம் நிறுவியும் மறப்போர் செய்தும் புகழ் பெற்றவர்களின் பெயரும் பீடும் பொறித்து வைப்பதும் உண்டு. “பெயரும், பீடும் எழுதிய பிறங்குநிலை நடுகல்” என்று சிறப்பித் துரைப்பர்.

     இதனால், பெண்ணின்ப வேட்கையால் அறிவு திரிந்து பாலை நிலத்து நடுகல் போலப் பயனின்றி ஒழிந்ததை எடுத்தோதியவாறாம்.

     (9)