3271. வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
வகுக்கமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைந்தபர வெளியாகி இயலுபய வெளியாய்
அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனியியற்கை யுண்மைவெளி யான
திருச்சிற்றம் பலம்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
உரை: பல்வேறு வண்ணங்களை யுடைய ஐம்பெரும் பூதங்கள் தங்கும் வெளி, அப் பூதங்களாலான பவுதிகங்கள் தங்கும் வெளி யென வகுத்துக் காணப்படும் மூலவெளிகட்கெல்லாம் இடமாய் விளங்கும் வெளியாகவும், சொல் லெல்லை கடந்து மன வெல்லைக்கண் நினைவுருவாகிய மவுன வெளியாகவும், அதற்கு மேல் பொருந்திய பரவெளியாகவும், இரண்டுங் கலந்த பராபர வெளியாகவும், ஒன்றற்கொன்று இடைவெளியின்றிச் செறிந்திருக்கும் சிற்பர வெளியாகவும், தற்பர வெளியாகவும் அமைந்த பெருவெளியாய், அருளின்ப வெளியாய், திண்மை சான்ற தனித்த இயற்கையான உண்மை வெளியாகும் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் சிவமாகிய தெய்வம் ஒன்றே; பலவல்ல. எ.று.
நில முதல் பூதங்கள் தனித்தனியே தங்குவது பூதவெளி; பூதங்களால் இயன்று அவற்றின் கூறாகும் பௌதிகப் பொருள்கட்கு இடம் பௌதிக வெளி; அதனைப் பகுதி வெளி என்று கூறுகின்றார். இவ்வெளிகள் ஆகாசம் எனப்படுவதுண்டு. அதனால் இவை பூதாகாசம், பௌதிகாகாசம், மூலாகாசம் எனப்படும். இவ்வாகாசங்கள் சொல்லும் எல்லைக்குள் அடங்குவன. இவற்றின் நுண்ணியவாய் மன வுணர்க்கே புலனாவது மௌனாகாசம். அதனின் மேலாவது பராகாசம்; அதற்குக் கீழ் வயங்குவன அபராகாசம். இரண்டையும் கூட்டி “உபய வெளி” என வுரைக்கின்றார். பராகாசம் உணர்வுருவாதலின், சிற்பர வெளி யெனவும் குறிக்கப்படுகிறது. இப் பரவெளியின் கண் ஞானமேயான சிவாகாசம் பெருவெளி எனக் காட்டப்படுகிறது. பூதாகாச முதலிய அபராகாசங்களில் உள்ளன போலச் சிவாகாசத்தில் திருவருள் ஞானமும் இன்பமும் உள்ளன வென்றற்கு “அருளின்ப வெளி” என இயம்புகிறார். ஒன்றி னொன்று அடங்குதலும் அடக்குதலுமாகிய செயல்களால் தன் தன்மை கெடாமை தோன்ற, விகாரி யாகாமை புலப்பட, “தனி யியற்கை யுண்மை வெளி” எனவும், அது சிதம்பரம் என்றற்குத் “திருச்சிற்றம்பலம்” எனவும், அங்கு எழுந்தருளும் பரம்பொருள் ஒன்றே; பலவல்ல எனற்கு, “தெய்வம் ஒன்றே கண்டீர்” எனவும் இசைக்கின்றார்.
இதனால், பூதாகாச முதல் சிவாகாசமாகிய சிதாகாசம் ஈறாய் நுண்ணிதாய சிற்றம்பலத்தில் தெய்வம் ஒன்றே யுளதென வற்புறுத்தியவாறாம். (2)
|