3272. சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
தத்துவங்கள் விளக்கமெலாம் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
நிலைத்தபரா பரைவிளக்கம்ஆகியகம்புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
பெருவிளக்க மாகியெலாம் பெற்றவிளக் கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றெ கண்டீர்.
உரை: நில முதலாக ஒன்றினொன்றைச் சார்ந்திருக்கும் பூதங்களின் விளக்கமும், அவற்றாலாகிய பௌதிகங்களின் விளக்கமும், கண் முதலாய தத்துவங்களின் விளக்கமும் ஆகிய இவற்றிற்கும் விளக்கம் தரும் மூல விளக்கமாகியும், அதற்கு நேர்பட்ட விளக்கம் தருவதாகிய சத்தி விளக்கமாகியும், அதன் நிலைபெற்ற பராபரை விளக்கமாகியும், அகமும் புறமுமாய் நிலவும் உலகியலாசை விளக்கமும், நிராசையாகிய சுத்த விளக்கமாகி பெருவிளக்கமாகியும், எல்லா விளக்கங்களைத் தன்னகத்தே கொண்ட சிறப்புப் பொருந்தத் தன்னியல்பாகும் சகசவொளியாவது திருச்சிற்றம்பலத்திலே எழுந்தருளும் சிவபிரானாகிய தெய்வ மொன்றே என அறிமின். எ.று.
நிலத்தைச் சார்ந்து நீரும், அதனைச் சார்ந்து நெருப்பும், அதனைச் சார்ந்து காற்றும், அதனைச் சார்ந்து விண்ணும் நிற்றல் பற்றிச் சார்பூத விளக்கம் என்று கூறுகின்றார். பூதப் பகுதிகள் என்றது, பூதங்களின் அடியாகத் தோன்றிய பௌதிகப் பொருள்களை என அறிக. கண் முதலாக வுள்ள ஆன்ம தத்துவமும், வித்தியா தத்துவமும், சிவ தத்துவமும் அடங்கத் “தத்துவங்கள் விளக்க மெலாம்” என வுரைக்கின்றார். ஆதி விளக்கமாவது, சிவ சத்தியின் விளக்கம் அது பரமனுக்குப் பராசத்தியாகித் தத்துவ தாத்துவிகங்களை விளக்குவது பற்றி, “பரை விளக்கமாகி” எனப் பகர்கின்றார். மேனின்ற தத்துவங்களையும் கீழ் நிற்கும் தாத்து விகங்களையும் விளக்குதலால், “பராபரை விளக்கமாகி” என இயம்புகின்றார். பரை விளக்கத்தின் நிலைத்த தன்மையை யுணர்த்த “நிலைத்த பராபரை” எனக் கூறுகிறார். ஆசை - பக்கம்; திசையுமாம். அகம் புறம் என்பன ஆசைக் கூறுகளாதலால், “அகம் புறமும் பேராசை விளக்கமதாய்” என்கின்றார். ஆசை - விருப்பப் பொருளதாய்த் துன்பத்துக் கேதுவாவது. நிராசை இன்ப வேதுவாதல் பற்றி, அதன் விளக்கத்தைச் “சுத்த விளக்கம்” என்கின்றார். அதனிற் பெரிய விளக்கம் வேறின்மை பற்றி, “பெரு விளக்கமாகி” எனவும், பெருமை புலப்பட “எல்லாம் பெற்ற விளக்கமதாய்” எனவும் எடுத்துரைக்கின்றார். மேற்கூறிய விளக்கம் பலவும் சிவம் நல்க விளங்குவனவாதலால், சிவ விளக்கத்தை “இயற்கை விளக்கம்” என இசைக்கின்றார். விளக்கமெலாம் தரும் விளக்கமாகியும் பரை விளக்கமாகியும், பராபரை விளக்கமாகியும், பெருவிளக்கமாகியும், இயற்கை விளக்கமாவது சிவ விளக்கமாம் தெய்வமொன்றே என இயையும்.
இதனால், சிவத்தின் தனி விளக்கம் காட்டியவாறாம். (3)
|