பக்கம் எண் :

328.

    மக்கட் பிறவி எடுத்தும்உனை
        வழுத்தாக் கொடிய மரம்அனையேன்
    துக்கக் கடலில் வீழ்ந்துமனம்
        சோர்கின் றேனோர் துணைகாணேன்
    செக்கர்ப் பொருவு வடிவேற்கைத்
        தேவே தெவிட்டாத் தெள்ளமுதே
    முக்கட் கரும்பின் முழுமுத்தே
        முறையோ முறையோ முறையேயோ.

உரை:

     அத்தி வானம் போலும் நிறமும் ஒளியுமுடைய கூரிய வேற்படையை ஏந்துகின்ற கையையுடைய தேவர் பெருமானே, உண்ணத் தெவிட்டாத தெளிந்த அமுதமே, மூன்று கண்களையுடைய சிவனாகிய கரும்பினிடத்தே தோன்றின முத்துப் போல்பவனே, நல்லறிவுடைய மக்கட் பிறப்பெடுத்தும் உன்னை அறிந்து வணங்கி வழிபடாத கொடிய மரம் போன்றேனாதலால் தொடர்ந்து வரும் துன்பமாகிய கடலில் வீழ்ந்து மனம் தளர்ந்து வேறு துணை காணாமல் வருந்துகின்றேன்; இது முறையாகுமோ? ஆகாதே! எ. று.

     செக்கர் - சிவப்பு நிறம். அந்தி வானம், சிவப்பு நிறமும் ஒளியும் கொண்டு திகழ்தலால், “செக்கர்ப் பொருவு வடிவேல்” என்று கூறுகிறார். வேற்படைக்குச் செம்மை நிறம் பகைவனைக் கொன்றழித்தமையால் உளதாய தென்று அறிஞர் கூறுவர். தேவர் சேனாபதி யாகலின் “தேவே” என்கிறார். உலகிற் பெறப்படும் அமுதம் தெளிவுடைய தாயினும் தெவிட்டும் இயல்பிற்றாதலின் முருகப் பெருமானைத் “தெவிட்டாத் தெள்ளமுது” என்று தெரிவிக்கின்றார். சிந்திப்பார் சிந்தைக் கண் தேனூற நிற்பது பற்றி, “அமுதே” எனப் புகழ்கின்றார். கணுவைக் கண் என்னும் வழக்குப் பற்றிச் சிவனை, “முக்கட் கரும்பு” என்றும், கரும்பின் கணுவிடத்தே தோன்றுவது முத்தென்பதனால், “ கரும்பின் முழுமுத்தே” என்றும் மொழிகின்றார். ஏனைப் பிறப்புகட்கு இல்லாத நன்று தீது கண்டாய்ந்து கொள்ளும் அறிவுடைமை மக்கட் பிறப்புக்குச் சிறப்பாய் அமைந்திருத்தலின், “மக்கட் பிறவி எடுத்தும்” என உரைக்கின்றார். அச் சிறப்பறிவால் முருகனது முழு முதலாம் தன்மையை யுணர்ந்து நாளும் வணங்கி வழிபடுதல் கடமையாகவும் அதனைச் செய்யாமை பற்றி, “வழுத்தாக் கொடிய மரம் அனையேன்” என்றும் தம்மையே பழிக்கின்றார். “மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்” (குறள்) என்று சான்றோர் குறிப்பதால், “கொடிய மரம் அனையேன்” என்கிறார். கொடிய மரம் - இனிய கனியும் தண்ணிய நிழலும் தந்து பயன் படாத மரம். நல்லறிவும் நற்செயலுமாகிய பண்பில்லாத மக்கள் கடலலை போல் தொடர்ந்து வரும் துன்பங்களால் வருந்தி உடலும் உள்ளமும் சோர்ந்து எழுகின்றமையின், “துக்கக் கடலில் வீழ்ந்து மனம் சோர்கின்றேன்” என்றும், உலகியலில் துன்பக் காலத்தில் துணையாவாரைக் காண்பது அரிதாகலின், நின்னைத் தவிர, “ஓர் துணை காணேன்” என்றும் சொல்லுகின்றார்.

     இதனால், நல்லறிவு கொண்ட பிறப்பெடுத்தும் முருகனது முதன்மை யறிந்து வழுத்தாத முறையற்ற செயலை எடுத்தோதி வருந்தியவாறாம்.

     (2)