3281. இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
உரை: தன்னியல்பில் ஒருவகைத் தொடர்பு மில்லாதவரும், குணவகை யாதும் இல்லாதவரும், தத்துவக் கூறுகளில் ஒன்றுமில்லாதவரும், வேறாய செயல் யாதும் இல்லாதவரும், பிறப்பிறப்புக்கள் அறவே யில்லாதவரும், ஒரு சிறிதும் தம்மியல்பில் விகாரப் படாதவரும், களங்க மில்லாதவரும், குற்றமே யில்லாதவரும், காண்போர் வியக்கத் தக்க வேண்டுதலோ, வேண்டாமையே இல்லாதவரும், மெய்ம்மையே உருவாகியவருமாய் எங்கும் விளங்கி இன்ப மயமாய் உயிர்கள் மகிழும் சிவானந்த சிற்சபையின்கண் உயர்ந் தோங்குகின்ற ஒப்பற்ற கடவுளாகிய பரசிவம் ஒன்றே உளது எனத் தெளிமின். எ.று.
ஆன்மாக்களை இயற்கையும் செயற்கையுமாய்ச் சூழ்ந்திருக்கும் பாசங்கள் சிவபரம் பொருட்கு இல்லை யென்பாராய், “இயற்கையிலே பாசங்கள் ஒன்றுமில்லார்” என வுரைக்கின்றார். பாசங்கள் மல மாயை கன்மம் என்ற மூன்றுமாம்; அவற்றுள் மல பாசம் இயற்கை; மாயை கன்மம் என்ற இரண்டும் மலமேதுவாக எய்துதலின், செயற்கை. குணங்கள் மூலப் பகுதியாகிய மாயா காரியமாகலின், அவற்றிற் கெல்லாம் வேறாகிய சிவத்துக்கு இல்லாமை பற்றி, “குணங்கள் ஏதுமில்லார்” என கூறுகின்றார். ஆன்ம தத்துவமும் வித்தியாதத்துவமும் சிவ தத்துவமுமாகிய தத்துவக் கூறுகள் உணர்த்த வுணரும் சிறுமையை யுடைய உயிர்கட்கே வேண்டப்படுதலின், “தத்துவங்கள் ஏது மில்லார்” என மொழிகின்றார். ஆன்மாக்களைப் போலக் குண வேறுபாடுகட் கேற்பச் செயல் வேறுபடும் இயல்பில்லாதவர் சிவபெருமான் என்றற்கு “மற்றோர் செயற்கை யில்லார்” என்று கூறுகின்றார். மலம் நீங்கித் தூய்மையுற்றுச் சிவம் பெறல் வேண்டி ஆன்மாக்கட் குளவாகும் பிறப் பிறப்புக்கள் பரசிவத்துக்கு வேண்டப்படாமையின், “பிறப்பில்லார் இறப்பில்லார்” எனவும், காலம் இடம் செயல்கட் கேற்பக் குணஞ் செயல் வேறுபடும் திரிபு உயிர்கட்கன்றிச் சிவத்துக்கு வேண்டாமையால் “திரிபில்லார்” எனவும், திரிபு காரணமாகக் குற்றங்களும் தீமைகளும் உண்டாதலின், “களங்க மில்லார் தீமை யில்லார்” எனவும் இயம்புகின்றார். விருப்பாலும் வெறுப்பாலும் மக்களின் சொற் செயல்கள் வியப்பை விளைவித்தலால், “வியப்புற” என்று சிறப்பிக்கின்றார். மெய்ம்மையே சிவத்தின் திருவுறு என்றற்கு “மெய்யே மெய்யாகி” என விளம்புகிறார். இன்ப மயம் சுத்த சிவம் என்றற்கு ஏதுவாதலால், “சுத்த சிவானந்த சபை” என வுரைக்கின்றார்.
இதனால் சிவத்தின் பொது வியல்பை விளக்கியவாறாம். (12)
|