பக்கம் எண் :

33.

    பண்ணேர் மறையின் பயனே சரணம்
        பதியே பரமே சரணம் சரணம்
    விண்ணே ரொளியே வெளியே சரணம்
        வெளியின் விளைவே சரணம் சரணம்
    உண்ணே ருயிரே உணர்வே சரணம்
        உருவே யருவே உறவே சரணம்
    கண்ணே மணியே சரணம் சரணம்
        கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:

     இசை பொருந்திய மறையை ஓதுவதால் விளையும் பயனே, பதிப் பொருளே, பரம்பொருளே, விண்ணிடத்து விளங்கும் ஒளிப் பொருளே, அதனின் மேலாய வெளியே, அவ்வெளியின் விளைவாகிய பொருளே, உடற்குள் நிலவும் உயிராயவனே, உணர்வு வடிவாயவனே, உருவமாயும் அருவமாயும் உள்ள பொருளே, எனக்கு உறவாகியவனே, என் கண்ணே, கண்ணின் மணியே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலாம். எ. று.

     நான்மறைப் பாட்டுக்கள் இசை யமைந்தவை யாதலால், “பண்ணேர் மறை” யென்றும், அவற்றைப் பாடுவார்க்குப் பொருள் தந்து அவரை வாழ்வித்தல்பற்றி, “மறையின் பயனே” என்றும் கூறுகின்றார். “விழை யாருள்ளம் நன்கெழ நாவில் வினைகெட வேதம் ஆறங்கம் பிழையா வண்ணம் பண்ணியவன்” (பேணுபெருந்) என ஞானசம்பந்தர் உரைப்பர். உடல் கருவியுலகுகளைப் படைத்தளித்து உயிர்கள் மலவிருளின் நீங்கி இன்பம் பெறுவித்தலாற் பதிப்பொருளாதல் பற்றி, “பதியே” என்றும், பசு, பாச, பதி நிலைகட்கு மேலாயவனாதலால் “பரமே” என்றும் புகழ்கின்றார். பதியாதலும் பரமாதலும் சருவ ஞானோத்தரம் முதலிய சிவாகமங்களில் விளக்கப் படுகின்றன. வானத்தே நின்று மண்ணகத்துக்கு இரவிலும் பகலிலும் ஒளி நல்கும் சந்திர சூரியர்களைப் படைத்தளித்த நலம் விளங்க “விண்ணேர் ஒளியே” என்றும், அவற்றிற்கிடம் தந்து நிற்பதால் விண் வெளியைச் சுட்டி, “வெளியே” என்றும் விளம்புகின்றார். விண்வெளியாய் ஞாயிறு முதலியவற்றிற்கு இடமாய், அவற்றின் ஒளி பெற்று உயிர்கள் வாழ்வது பயனாய் இலங்குதலால் “வெளியின் விளைவே” என்று குறிக்கின்றார். உடற்குள் இருந்து அது முழுதும் ஒன்றாய்க் கலந்திருப்பது பற்றி, உயிரை “உண்ணேர் உயிரே” என்றும், உயிர் தானும் உணர்வு வடிவிற்றாதலால் “உணர்வே” யென்றும் உரைக்கின்றார். உடலின் வேறாயினும் ஒன்றாய்க் கலந்து நிற்கச் செய்வது காரணமாக முருகக் கடவுளை, “உயிரே யுணர்வே” எனக் கூறுகின்றார். அப்பெருமான் உருவமும் அருவமுமாகிய பொருள் தோறும் கலந்து நிற்பதால் அவனை “உருவே அருவே” என்று உரைக்கின்றார். உடற்குள் உயிர் நின்று பொருள்களைக் கண்டுணர்தற்குக் கருவியாய் உதவுவித்தலால், “கண்ணே மணியே” எனச் சிறப்பிக்கின்றார்.

     இதனால், மறையின் பயனாயும் உலகிற்குப் பதி பரங்களாயும் பிற வாயும் அருள் புரியும் திறம் கூறிக் கந்தவேளின் திருவடியைப் புகலடையுமாறு கூறப்படுகிறது.

     (33)