பக்கம் எண் :

3302.

     காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும்செல்வக்
          களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
     நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
          நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
     ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
          அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
     கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
          குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.

உரை:

     தில்லையம்பலத்தில் ஆடல் புரிகின்ற உயர்ந்த மணி போல் திகழும் சிவபெருமானே, பெருகித் தோன்றுகின்ற உப்பு நீர்க் கடல் போலக் கலைத் துறைகளிலும் செல்வச் சிறப்பிலும் மகிழ்ச்சி நிறைந்துள்ள யான், மிக்குத் தோன்றுகின்ற துன்பத்தில் வருந்துவோர்க்கு ஒருசிறிதும் உதவாமல் மிக நெடிது ஆழ்ந்து நீருதவாத பாழ்ங்கிணறு போன்றவனாய், உயிர்த்தொகைகளை வாழ்விற் செலுத்தி உய்விக்கின்ற திருவருளின் பெருமையைச் சிறிதும் அறியா திருக்கின்றேன்; அறியாமைக்கு அஞ்சுவதோ நாணுவதோ இல்லேன்; அடக்கம் சிறிதும் உடையேனல்லேன்; இவ்வாறு தவறாய நெறியிற் சேர்க்கின்ற உலகியலில் நான் பிறந்தது ஏனோ? நின்னுடைய திருவுளக் கருத்தை அறிகிலேன். எ.று.

     மன்று எனப் பொதுப்பட மொழிதலின், தில்லையம்பலத்துக்காயிற்று. மணி - மாணிக்க மணி உலகவர் இனிது காண விளங்குவது நிலவுலகைச் சூழ்ந்த உப்பு நீர்க் கடலாதலின், “காட்டுகின்ற உவர்க்கடல்” என்றும், கலைப் பயிற்சியின் மிகுதி புலப்படுத்தற்குக் “கடல் போல்” என வுவமம் செய்தும் உரைக்கின்றார். கலைப் புலமை விளைவிக்கும் செருக்கிலும், அறிவை மயக்கும் இயல்பு பற்றிச் செல்வ செருக்கிலும் திளைப்பது விளங்க, “கலைகளிலும் செல்வக் களிப்பிலும் சிறந்து மிகக் களித்து நிறைகின்றேன்” எனக் கூறுகின்றார். களித்தல் - கள்ளுண்டாற் போல் அறிவு மயங்குதல். களித்து நிறைதல் - தெளிவுறாத மயக்க முறுதல். சிறிதாகாது பெருகி நிற்கும் இடையூறு, நீட்டுகின்ற ஆபத்து எனப்படுகிறது. ஆபத்தில் உதவுதல் உயிர்க் கடனாதலால், அது செய்யாமையை “ஆபத்தில் ஒரு சிறிதும் உதவேன்” என எடுத்தோதுகின்றார். படுங்கிணறு - கேடு செய்யும் பாழ்க் கிணறு. உலகிற் பிறந்தாரை வாழ்விப்பது திருவருளின் பெருஞ் செயல் என்பதனால், “ஆட்டுகின்ற அருட் பெருமை” என்றும், அதனை எண்ணி வாழ்த்துவது அறமாகவும், அதனைச் செய்யாத குற்றத்தை “அருட் பெருமை ஒருசிறிதும் தெரியேன்” எனச் செப்புகின்றார். திருவருள் நலமறியாமை குற்றமாதலின், “அச்சமிலேன் நாணமிலேன்” எனவும், அடக்க மின்மை இருள் நிறைந்த நரகிற் புகுத்துமென்பது பற்றி, “அடக்க மொன்று மில்லேன்” எனவும் இயம்புகின்றார். அறிவறியாதவரைத் தவறாய நெறியிற் செலுத்தித் துன்பத்தி லாழ்த்துவது உலக நடையின் செயலாதலால், “கூட்டுகின்ற உலகு” என்று கூறுகின்றார்.

     இதனால் உலகியலின் தீமையை உரைத்தவாறாம்.

     (10)