3304. போக மாதியை விழைந்தனன் வீணில்
பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேக மாதியைப் பெறுமுயன் றறியேன்
சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆக மாதிசொல் அறிவறி வேனோ
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
உரை: மண் பெண் முதலிய போகப் பொருள்களை விரும்பி வீணேகாலம் கழிக்கும் கீழ்மகனாகிய யான், அழியா வுடம்பாற் பெறும் ஞானவின்பங்களைப் பெறற்கு முயன்றேனில்லை; புண்பட்ட நெஞ்சமாகிய குரங்கொடு திரிந்துகெடுகிறேன்; காக்கை முதலிய பறவை யினம் உண்டொழிதற்கு ஒரு பருக்கைச் சோறும் ஈயக் கருதாத கீழ் மக்களிற் கீழாயினேன்; இத்தகைய யான் சிவாகமங்கள் எடுத்தோதும் மெய்யறிவை அறிவேனோ? எனக்கு அப்பனாகிய சிவபெருமானே, அறிந்து உய்யுமாறு என்னை ஆண்டு அருள், ஞானம் வழங்குக. எ.று.
உலகியல் நல்கும் மயக்கமுற்று மண்ணாலும் பெண்ணாலும் பொருளாலும் நுகரப்படும் போகங்களை விரும்பி ஆராமை கொண்டு வீண் காலம் போக்கும் கீழ்மகன் எனத் தம் மியல்பு கூறுவாராய், “போக மாதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன்” எனப் புகல்கின்றார். போகமும் அதனை நுகர்தற்கேற்ற உடம்பும், நுகர்ச்சிக்குரிய நினைவு செயல்களை நல்கும் கருவி கரணங்களும் அடங்க, “போக மாதி” என்று கூறுகின்றார். ஆதி, முதலியன என்னும் பொருள்பட வரும் வடசொல். விழைந்தனன் - முற்றெச்சம். உலகிற் போகங்கள் உலகின்பால் பெரு மோகத்தை நல்குதலின், “வீணிற் பொழுது போக்கிடும் இழுதையேன்” என்கின்றார். இழுதை - சிறிதிற்குக் குழைந்து வலி யிழக்கும் தன்மை; சிறு வெம்மைக் குருகும் வெண்ணெயும் மெழுகும் போல. மனத்திண்மையும் அதனால் வினைத்திண்மையும் இல்லாத கீழ் மக்களை இழுதைமாக்கள் என்பது நூல் மரபு. அதனால் “இழுதையேன்” என்கிறார். “உழுத சால் வழியே யுழுவான் பொருட்டு, இழுதை நெஞ்சமி தென்படுகின்றதே” (தனிக்) எனத் திருநாவுக்கரசர் வழங்குவது காண்க. ஞான வான்கள் பெறும் பிறவா யாக்கையை “அழியாத் தேகம்” எனச் சிறப்பிக்கின்றார். அத்தேகத்தோடு கூடிப் பெறும் நலங்களை “ஆதி” என்பதனாற் பெறுவிக்கின்றார். அழியும் வாழ்வு பெற்றது அழியா வாழ்வு பெறற் கென வுணர்ந்து அதற்காக முயலாமை பற்றி, “முயன்றறியேன்” என மொழிகின்றார். சிரங்கு - புண். நெஞ்சமாகிய புண்ணுற்ற குரங்கு அமைதியின்றி அலமந்து உழல்வது போல மன நோயுற்றுப் பேதுறுகின்றேன் என்பாராய் “சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்” என வுரைக்கின்றார். காக்கைக்கு ஒரு சோறும் உதிர்க்க விரும்பாத மனப்பான்மை கயவர்க்குண்மையின், “காக மாதிகள் அருந்த வோர் பொருக்கும் காட்ட நேர்ந்திடாக் கடையரிற் கடையேன்” எனக் கூறுகின்றார். “ஈர்ங்கை விதிரார் கயவர்” (குறள்) எனச் சான்றோர் உரைப்பதறிக. ஆகம மாதி என்பது ஆகமாதி என வந்தது. சிவ ஞானமும் அதனைப் பெறும் திறமும் பயனும் அறிவுறுத்துதலின், “ஆகமாதி சொல் அறிவு” என இயம்புகின்றார்.
இதனால், ஆகம ஞானப் பேற்றுக்கு முயல மாட்டாமை தெரிவித்தவாறாம். (2)
|