3312. இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
உரை: அம்பலத்தில் திருக் கூத்தாடும் பெருமானே, இருளுடையவற்றையே ஒளி யுடையவை என மாறி யெண்ணி மாண்பிழந்தேன்; பொறி வாயிலாக இச்சை விளைவித்த பொருள்களையே பெரிதும் விரும்பத்தக்க வையாகக் கருதி வருந்தினேன்; மயக்க வுணர்வை நல்கும் மனமாகிய குரங்கொடு கூடி நாடெல்லாம் சுற்றி மனம் போன வழித் திரிபவர்களையே இனமாகக் கொண்டு அலைந்தேன்; சிவஞானமாகிய மெய்ப்பொருளை நாடுகின்ற நல்லுணர்வு பெறா தொழிந்தேன்; அதற்குரிய நின்திருவருளைப் பெறுதற்கு யான் யாது செய்வேன்; அப்பனாகிய நீ என்னை ஆட்கொண்டருளுக. எ.று.
குற்றமாய்த் துன்பமும் அறியாமையும் செய்வனவற்றை “இருள்” எனச் சுட்டுகின்றார். மதித்தல் - நினைத்தல். பொருளாகாதவற்றைப் பொருள் எனக் காட்டுவது மருளுணர்வு. மனதைக் குரங்கென்பதனால், மனம் காணும் நாட்டை “வனம்” என்று சொல்லுகின்றார். நல்லினமாகாதவர் வாழ்வது நாடாயினும் துன்பம் தருவதால் காடு எனப்படுதலின், “வனமெலாம் சுழன்று இனமெனத் திரிந்தேன்” என்று தெரிவிக்கின்றார். பொறிபுல ஆசையும் மருளுணர்வும் தீயினச் சேர்க்கையு முற்றதனால் மெய்யாகிய உறுதிப் பொருளை எண்ணா தொழிந்தேன் என வருந்துகின்றமை தோன்ற, “பொருளை நாடும் நற்புந்தி செய்தறியே” னெனக் கூறுகின்றார்.
இதனால், மெய்ப் பொருள் நாட்டம் பெறுதற்கு அருள் புரிக என வேண்டிக் கொண்டவாறாம். (10)
|