பக்கம் எண் :

3314.

     அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
          அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
     நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
          நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
     மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
          மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
     இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
          யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே

உரை:

     அகந்தையாகிய குற்றத்தை அதன் கொடி வேரோடும் பெயர்த்தெடுத்து எறியும் திறத்தை அறியேன்; மெய்யுணர்வுடைய அறவோர்களை யடைந்து ஞானம் பெறும் நெறியையும் அறியேன்; மலைகளிலும் காடுகளிலும் பயின்றுறையும் தாபதர்களைப் போல நலம் நயந்தறியேன்; நச்சுக் கனிகளையுடைய மரம் போல் பல்வேறு இச்சைகளை யுற்று வருந்துகிறேன்; வேள்விகளைச் செய்துயரும் தேவர்கள் யாவரும் வந்து வணங்க நின்று, திருக்கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தைக் கண்டு பரவும் திறத்தையுடையனாவனோ? இவ்வுலக இன்பங்களின் பொருட்டே அலைகின்ற நான் எவ்வாறு அம்பலத் தெல்லைக்குட் புகுவேன்; என் விருப்பத்தை எவர்க்கு எடுத்துச் சொல்லுவேன்; என்ன செய்வேன்? ஒன்றும் அறியாதவனாயினேன். எ.று.

     அகங்காரம் - நான் என்னும் தன்முனைப்பாகிய குற்றம்; இது தற்போதம் எனவும் நூல்களில் வழங்கும். குற்றமாகிய செருக்கைத் தோற்றுவித்து அறிவை மயக்கிப் பலவகைக் குற்றங்களைச் செய்து துன்புறுவிப்பதாகலின், “அகங்காரக் கொடுங் கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்” என வுரைக்கின்றார். உடற்குள் உயிர்ச் சூழல்காறும் வேர்விட்டு ஆழ்ந்திருப்பது பற்றி, “அகங்காரக் கொடுங் கிழங்கு” எனக் கூறுகின்றார். அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர்” (மீனா. பிள்ளை) எனக் குமரகுருபரரும் கூறுவது காண்க. அறிவு - மெய்ப்பொருள் அறிவு. அறிவுடையோர் அறிய வேண்டுவ தொன்றாகலின், அதனை “அறிவறிதல்” என்பர். அந்தணர் - அறவோர். செந்தண்மை பூண்ட பெரியோர்களாதலால் அவர்களை முறைப்படி கண்டு பயில வேண்டுவது பற்றி “அந்தணர்பாற் செறியும் நெறியறியேன்” எனவுரைக்கின்றார். நகம் - மலை. கானம் - காடு. மலைகளிலும் காடுகளிலும் தனித்திருந்து தவம் புரியும் இயல்பினராதலால், “நகம் கானமுறுதவர்” எனக் குறிக்கின்றார். உற்ற துன்பத்தைத் தாங்கி எவ்வுயிர்க்கும் நலம் செய்வதன்றித் தீங்கு செய்யாராகலின், “தவர் போல் நலம் புரிந்து மறியேன்” என இயம்புகின்றார். உள்ளத் தெழும் இச்சைகள் யாவும் துன்பமே பயத்தலின், அவற்றை “நச்சு மரக் கனிகள்” எனக் குறிக்கின்றார். தன் மனக் கொடுமை காட்டற்கு நச்சுக் கனி என்னாமல் “நச்சு மரக் கனிகள்” என நவில்கின்றார். இச்சை கனிதல் - இச்சை கொண்டுழலுதல். மகம் - வேள்வி. வேள்வி செய்வோர் மறுமையில் தேவராவர் என்பது பற்றி, “மகம் காணும் புலவர்” எனச் சொல்லுகின்றார். புலவர் - தேவர். புலன் வழிப் போகங்களை நுகர்தலால் தேவர் புலவரெனப்படுகின்றனர். தேவர்கள் வணங்கும் தில்லையம்பலமாதலால், “புலவரெலாம் வந்து தொழ நடிக்கும் மணிமன்றம்” எனச் சிறப்பிக்கின்றார். சிவபெருமான் நடிக்கும் இடமாகிய மன்றம், “நடிக்கும் மன்றம்” என இயைகின்றது. “மணி மன்றம் ஞானசபையாதலால், அதனையடையும் ஞான நெறி தமக்குத் தெரியா தென்பாராய், “வழியும் அறிவேனோ” எனவுரைக்கின்றார். உலகியலின்ப நாட்டம் ஞானப்பேற்றுக்குத் தடையாதல் தோன்ற “இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன்” என்று இசைக்கின்றார். மாட்டாமை பற்றி, “யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே” என்று கூறுகின்றார்.

     (2)