3315. கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
உரை: கற்பவை முறையறிந்து கல்லா தொழிந்த யான், முறைப்படி கற்பனவற்றைக்கற்ற ஞானிகளின் திருக்கூட்டத்தில் கூடி மகிழ்ந்திருக்கும் திறத்தையறியேன்; கற்றவாறு நின்றொழுகும் இயல்பு தானும் யான் அறிந்தேனில்லை; கல்வி வழி நிற்பாரைப் போல நடிக்கின்றேன்; நெடிது பெருகும் காம விச்சையாகிய கடலில் அழுந்திக் கரையேறும் திறமறியாது அதனுள் ஆழ்ந்து கெடுகின்றேன்; ஞான மாண்புடைய திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடி யருளும் திருவடி என் தலைமேற் பொருந்த வணங்கி வழிபட அறியேன்; ஆனால், வாழ்வார்க்கு ஆகாத தீக்குணம் கொண்டு திரிகின்றேனாதலால் நான் எவ்வாறு அந்த ஞான வம்பலத்துட் புகுவேன்; இதனை யாவர்க்குரைப்பேன்; யாது செய்யவல்லேன்; ஒன்றும் தெரிகிலேன். எ.று.
கற்றற் குரியதாயினும் முறைப்படி கற்றாலன்றிக் கல்வி அறிவுப் பயன் நல்காமை பற்றி, “கற்கு முறை கற்றறியேன்” என்று கூறுகின்றார். முறையாவது கசடறக் கற்றல். “கற்க கசடறக் கற்பவை” (குறள்) எனப் பெரியோர் உரைப்பது காண்க. முறையாகக் கற்க வேண்டிவற்றைக் “கற்பன” என்றும், முறைப்படி கற்று அறிவு பெற்றுயர்ந்தவர்களைக் “கற்றறிந்த கருத்தர்” என்றும், அவர்கள் என்றும் எங்கும் அன்பாற் கூடியிருப்பது பற்றி, “கருத்தர் திருக் கூட்டம்” என்றும் புகழ்கின்றார். கற்றார் கூட்டம் கல்வி யறிவு நல்கும் பேரின்பத்தில் திளைப்பது விளங்க, “களித்திருக்க அறியேன்” என இசைக்கின்றார். முறைப்படி மேன் மேற்கல்லா தொழிந்தேனாயினும், கற்ற வளவிற் கற்றாங்கு நிற்கும் திறம் என்பால் இல்லையென்பார், “நிற்கு நிலை நின்றறியேன்” என்றும், எனினும் கற்ற வழி நிற்பவர் போல யான் நடிப்பதுண்டு என்பாராய், “நின்றாரின் நடித்தேன்” என்றும் இயம்புகின்றார். நடித்ததும் என்னுள் எழும் காம வேட்கைகளை மிகவும் நுகர்தற் பொருட் டென்றற்கு “நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும் வகை” எனவும், அது தானும் நிறைவுறாமையால் காமப் பெருக்கில் ஆழ்ந்து கெடுகின்றேன் என்பாராய், “நீந்தும் வகை அறியேன்” எனவும் இசைக்கின்றார். சிற்குணம் - ஞான மாண்பு; அது பற்றியே தில்லையம்பலம் “ஞான சபை” எனப்படுகிறது. திருவடி தலை மேற்பொருந்த வணங்குதல் திருவருள் ஞானம் பெறுதற்கு ஏதுவாதலால் “திருநடனம் புரியும் திருவடி என் சென்னிமிசைக் சேர்க்க அறிவேனோ” என மொழிகின்றார். கற்பன கற்று, கற்றாங்கு நின்று காமாதியிச்சைகளை போக்கினார்க் கல்லது ஞானசபை புகுந்து திருவடி ஞானம் பெற முயலாது பொருந்தாத குணம் செயல்களால் வருந்துகின்றமை புலப்பட, “இற்குணம் செய்துழல்கின்றேன்” என இசைக்கின்றார். இல்குணம் - பொருத்தமற்ற தீக்குணம்; எதுகை நோக்கி, இற்குணமென வந்தது. நற்குண நற்செய்கையில்லாதார் ஞான சபைக்குட் புகும் நலமுடையரல்லாராகலின், “எங்ஙனம் நான் புகுவேன்” என்றும், இது குறித்துப் பரிந்துரைப்பார் உலகில் இல்லாமை கண்டு “யார்க்குரைப்பேன்” என்றும், இதனாற் செயலறுதி யுண்டாதலின், “என்ன செய்வேன்” என்றும், அதன் பயனாக அறிவு மயங்குதலால், “ஏதும் அறிந்திலனே” என்றும் துயர்ப்படுகின்றார். (3)
|