பக்கம் எண் :

3316.

     தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
          சித்தாந்த நிலைஅறியேன் சுத்திநிலை அறியேன்
     யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
          உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
     ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
          அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
     ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
          யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

உரை:

     உடம்பின் காரணப் பொருளாக வுள்ள பூதங்கள் ஐந்தும் நிற்கும் நிலையை அறியாத யான் சிவாகாமங்களின் நிலையையோ, எண்வகைச் சித்திகளின் இயல்பையோ யோக நெறி காட்டும் நிலைமையையோ, அறிந்திலேன்; உலகியல் வாழ்க்கையிடை யிருந்து உழைப்பவருட் கடையனாகிய யான், மேனியிற் பூசப்பட்டிருக்கும் திருநீற்றின் ஒளி திகழப்பக்கத்தே சாய்ந்தசைத்து அம்பலத்தில் ஆடல் புரிகின்ற திருவடி நலத்தை அறிய வல்லவனாவேனோ? அடி கூடிப் பெறும் ஏகானுபவத்தை அறிவேனா? இத்தகைய யான் எவ்வண்ணம் திருவம்பலத்துட் புக வல்லவனாவேன்? என்னுடைய இக்குறையை யார்க்கு எடுத்துக் கூறுவேன்; யாது செய்வேன்? ஒன்றும் அறியேன். எ.று.

     நில முதலாகிய ஐம் பெருங் பூதங்களின் பரிணாமமே எனது தேகம்; இதன்கண் தோய்ந்திருக்கும் பூதக் கூறுகளின் நிலையை யான் அறிந்திலேன் என்பாராய், “தேகமுறு பூதநிலைத் திறம் சிறிதும் அறியேன்” என மொழிகின்றார். பூதங்கள் பரிணமித்திருக்கும் நிலையைத் தேகத்தின் பலவேறு கூறுகளில் காணும் செயலை, “நிலைத் திறம்” என்று குறிக்கின்றார். சித்தாம் என்பது சிவாகமம் உரைக்கும் திருநெறி, சிவாகமங்களைச் சித்தாந்தம் என்பது பற்றிச் “சித்தாந்த நிலை” எனத் தெரிவிக்கின்றார். தவயோகப் பயிற்சியாற் பெறுவது எண்வகைச் சித்திகள். அவை அணிமா, லகிமா, மகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் காம ரூபம் என எட்டென்பர். இவற்றைக் கைவரப் பெறும் நெறியும் பயனும் “நிலை” என்ற சொல்லால் தொகுத்துரைக்கப் படுகின்றன. சித்தி நிலை என்றதைச் சிவகாம சாரமாகத் திகழும் சிவஞான சித்தியார் என்ற நூலின் நுண்பொருள் என உரைப்பவருமுண்டு. யோகமுறு நிலையாவது இயமம், நியமம் முதலாக எண் வகைப்படும். அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரனை, தியானம், சமாதி என வரும். இவற்றின் விரிந்த இயல்புகள் பெருந்திரட்டு என்ற நூலின் யோகப் பணைப் பகுதியில் கூறப்படுகின்றன. இவ்வியல்புகளையறிந்து பயின்று பயன்காண்பது உணர்தலாதலால் “உணர்ந்திலேன்” என வுரைக்கின்றார். இங்கே சொன்ன நால்வகை அறியாமை கட்கும் எனது அறிவின் சிறுமை காரணம் என்பார், “சிறியேன்” என்று தெரிவிக்கின்றார். உலக நடை - உலக வாழ்க்கை. அஃது உழைப்பின் உருவாதலால், “உலக நடை யிடைக் கிடந்து உழைப்பார்” என வாழ்வாரைக் குறிக்கின்றார். அவருள் தமது கீழ்மையைக் காட்டற்கு “உழைப்பாரிற் கடையேன்” என உரைக்கின்றார். மன, மொழி, மெய் யென்ற மூன்றாலும் இயலுவது உழைப்பென அறிக. சிவனது சகளத் திருமேனியை, ஈண்டு ஆகம் என்கின்றார். மெய்ம் முழுதும் வெண்ணீற்றின் வெண்மை வொளி விளங்கச் சிவபிரான் திருநடம் புரிவது தோன்ற, “திருநீற்றின் ஒளி விளங்கச் அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடி” என்றும், சிவயோக சிவஞானங்களாலன்றிச் சிவத்தின் திருவடிப் பேறு இல்லாமையால், “அடியை அறிவேனோ” என்றும் அறிவிக்கின்றார். திருவடி ஞானத்தால் ஏகனாகி இறை பணி யென நிற்றல் ஏகானுபவமாதலால் நில்லாமை புலப்பட, “ஏசு வனுபவம் அறியேன்” என்று இயம்புகின்றார். அனுபவம் இல்வழிச் சிவபோகம் பெறலாகாமை தோன்ற, “எங்ஙனம் நான் புகுவேன்” என்றும், மாட்டாமை விளங்க “யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் ஏது மறிந்திலனே” என எடுத்து மொழிகின்றார்.

     (4)