பக்கம் எண் :

3318.

     கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
          கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
     கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
          கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
     மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
          மணிமன்றத் தனைஅடையும் வழியும்அறி வேனோ
     இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
          யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

உரை:

     பலவாகிய கலைகளை யுரைக்கும் சாத்திரங்களில் முடிவு இதுவெனக் கண்டதில்லை; மன முதலிய கரணங்களை யடக்கி யாளும் வழி யறியேன்; வழி யறிந்த தலைவர்களையும் பார்த்தறியேன்; கொலை முதலிய புலைச் செயல்களையுடையேன்; கோபம் முதலிய குற்றங்களைப் போக்கினேனில்லை; கொடிய காம வேட்கையாகிய கடலை நீந்திக் கடந்தேனில்லை. நற்குண மெனப்படும் மலைமேல் ஏறி யறியேன்; இப்பெற்றியை யுடையனாதலால் நான் ஞானத் திருக் கூத்து நிகழும் பொன்னம்பலத்தைச் சென்று சேரும் வழியை அறிய வல்லேனோ? இல்லை யென்று சொல்லத்தக்க பொய்யான உலகியலின் இடையில் அழுந்திக் கிடக்கின்ற யான் எவ்வாறு அம் பலத்துட் புகுவேன். எனது இயலாமையை யார்க்குக் கூறுவேன். யாது செய்வேன். ஒன்றும் தெரியாமல் வருந்துகிறேன். எ.று.

     கலை - கற்றுப் பயிலுதற்குரிய கல்வி வகை பலவும் கலை எனப்படும். அவை அனைத்தையும் துறை போகக் கற்று முடிவு காண்பது. அரிதாகலின், “கலை முடிவு கண்டறியேன்” என்று கூறுகின்றார். மன, மொழி, மெய்யென்னும் மூன்றும் அகக் கரணம் எனவும், கண் காது முதலிய கருவிகளைப் புறக் கரணமெனவும் கூறப்படுதலின், இரண்டு மடங்கக் “கரண மெலாம்” என்றும், இவ்விருவகைக் கரணங்களையும் அடக்கி நெறிப்படுத்தினாலன்றி வாழ்க்கைத் துன்பம் போக்குதற்கு வழியில்லையெனச் சான்றோர் உரைப்பதால் அவற்றின் வழி நிற்பதன்றி அவற்றையடக்கி என் வயமாக்கும் உபாயத்தை அறியேன் என்பார், “கரணமெலாம் கதியறியேன்” என்றும் உரைக்கின்றார். கதி - ஈண்டு உபாயம் குறிக்கின்றது. கதி யறியாவிடின், அறிந்த ஞானிகளை யறிந்தடைந்து பெறலாமெனின், அவர்களைத் தெரிந்தடையும் திறமும் என்னிடமில்லை என்பார், “கதி யறிந்த கருத்தர்களை யறியேன்” எனப் பகர்கின்றார். கருத்தர் - தலைவர். கரணங்களை யடக்குதல் தலைமைப் பண்பும் செயலும் தாமே வந்து அமைவது பற்றிக் “கருத்தர்” என்று குறிக்கின்றார். புலால் உணவுக்கு உயிர்க்கொலை ஏதுவாதலால் “கொலை புலைகள்” எனச் சேரக் காட்டுகின்றார். கோபம் - சினம். குற்றங்கள் பலவற்றிற்கும் காரணமாய், கடல் போல் பெருகிய நிலைமையை யுடையதாகலின், “கொடுங் காமக் கடல் கடக்கும் குறிப்பறியேன்” என்று கூறுகின்றார். சலியாமை பற்றிக் குணத்துக்கு மலையை உவமம் செய்கின்றார். நற்குண நற் செயல்களால் உயர்ந்தோரைக் குணமாகிய குன்றேரினார் என்பர். புலை, கொலை, காமம் முதலிய குற்ற மகன்றாலன்றி ஞான சபைக்குச் சேர்தல் ஆகாமை பற்றி, “ஞான நடம் புரியும் மணிமன்றம் தனை யடையும் வழியும் அறிவேனோ” என முறையிடுகின்றார். ஞான வாழ்வுக்கு உலகியல் வாழ்க்கை தடையாய் நின்று பேதுறவு செய்தல் பற்றி, “இலை யெனும் பொய் யுலகினிடை எங்ஙனம் நான் புகுவேன்” என வுரைக்கின்றார். உலகியலின் நிலையாமைத் தன்மையால், “இலை யெனும் பொய் யுலகு” என இயம்புகின்றார்.

     இதனாற் குணச் சிறப்பில்லாமையும் உலகியலின் பொய்ம்மையும் ஞான வாழ்க்கைக்கு இடையூறாவது காணலாம்.

     (6)