பக்கம் எண் :

3321.

     தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
          சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
     அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
          அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
     சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
          தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
     எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
          யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

உரை:

     தத்துவங்கள் யாவும் என் கருத்தின் வழி இயங்கச் செலுத்தும் திறத்தையும், சாகும் திறத்தின் நீங்கிச் சாகாமை நல்கும் கல்வியின் வகையையும் சிறிதும் அறியேன்; அத்த வுலகு சத்த வுலகு எனப்படும். உலகியற் பொருணிலையும் இவற்றின் மெய்ம்மை நிலையையும் அறியேன்; மெய்யுணர்வு பெற்று அடங்கி யொழுகும் ஞானியர்களையும் கண்டறியேன்; இத்தன்மையனாகிய யான், சுத்த சன்மார்க்கத்துக் கிடமாகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண் சிவபிரான் நடிக்கும் திருக்கூத்தின் முறைமையை அறிகிலேன்; குணமானவற்றைத் தேர்ந்தறியும் சிறப்பில்லாத யான் எவ்வாறு அவ்வம்பலத்துட் புகுவேன்; யாவர்க் குரைத்துத் தெளிவு பெறுவேன்; யாது செய்வேன்; ஒன்றும் தெரியேன். எ.று.

     தத்துவங்கள் நில முதல் சிவ மீறாக முப்பத்தாறாய், இறைவன் திருவருள் வழி நின்று உயிர்கள் வாழ்வாங்கு வாழ்தற்கென அமைந்தவையாதலால், “தத்துவமென் வசமாகத் தான் செலுத்த வறியேன்” என்றும், தத்துவ வியக்கம் உயிர்கள் பெற்றவுடம்போடே நிலைபெற்று நில்லாமற் சாதலிலே முடிதலின், அதனை மாற்றிச் சாகாவுடம்புடன் உறுதிப் பொருளைப் பெறுவது சாகாத கல்வியாதலால், அதனைக் கற்க மாட்டாமை தோன்ற, “சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன்” என்றும் சாற்றுகின்றார். அத்தநிலை பொருட் பிரபஞ்சம் எனவும், சத்த நிலை சொற் பிரபஞ்சமெனவும் வழங்கும்; அவற்றுள் அத்த நிலைக்கண் கலை, தத்துவம் புவனம் என்ற மூவகை யத்துவாக்களும் சத்தநிலைக்கண் வன்னம், பதம், மந்திரம் என்ற மூவகை யத்துவாக்களும் பொருந்தி உயிர்கள் வினை செய்தற்கு வாயிலாதலால், “அத்தநிலை சத்தநிலையறியேன்” எனவுரைக்கின்றார். மெய்யறிவு - உண்மை ஞானம். உண்மைஞானிகள் நினைவும் சொல்லும் செயலும் செய்வினையாய்ப் பிறவிக் கேதுவாதலை யுணர்ந்து திருவருளில் ஒன்றி நிற்பர்; அவரையறிந்தொழுகுவது நலம் பயக்குமாயினும் அப் பெருமக்களைக் காணேன் என்பார், “மெய்யறிந் தடங்கும் அறிஞரையும் அறியேன்” என விளம்புகின்றார். சன்மார்க்கம் -மெய்ம்மை நெறி. தத்துவாதீத பரசிவத்தையடையும் நெறி சுத்த சிவ சன்மார்க்கம்; அதனை நினைப்பிக்கும் கருத்தில் அமைந்தது தில்லைத் திருச்சிற்றம்பலம். மன்றம் பரவெளியையும், ஆடும் சிவபிரான் பரசிவத்தையும், திருக்கூத்து, உலகைப் படைத்தல் முதலிய மூவகைத் தொழிலையும், உயிர்கட்கருளல் மறைத்தல் என்ற இருவகைத் தொழிலையும் அறிவிக்கும் முறைமை பற்றி, “சுத்த சிவசன்மார்க்கத் திருப்பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாய மறிவேனோ” என்று கூறுகின்றார். ஞாயம் - முறைமை. இக்கூறிய அறிவு நலமுற்றும் குணமே காணும் இயல்புடையவர்க்கே அமைவனவாதலால், “எத்துணையும் குணமறியேன்” என்றும், தானறியாவிடினும் அறிந்தாரைக் கேட்டுத் தெளிவு பெற ஒருவரையும் காண்கிலேன் என்பாராய், “யார்க்குரைப்பேன்” என்றும், இந்நிலையிற் சோர்வு மிகுதலால், “என்ன செய்வேன்” என்றும், ஒன்றும் விளங்காமையால் “ஏதும் அறிந்திலனே” என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண் அத்துவா மார்க்கத் தடை கூறுவது காணலாம்.

     (9)